வடகிழக்கில் சரிகிறதா பா.ஜ., செல்வாக்கு?
வடகிழக்கில் சரிகிறதா பா.ஜ., செல்வாக்கு?
வடகிழக்கில் சரிகிறதா பா.ஜ., செல்வாக்கு?
ADDED : ஜூன் 24, 2025 12:25 AM

மிசோரமில், சக்மா தன்னாட்சி மாவட்ட கவுன்சில் நிர்வாகப் பொறுப்பு, பா.ஜ.,விடம் இருந்து கைநழுவி விட்டது. சிறிய அமைப்பாக இருந்தாலும், சக்திவாய்ந்த பழங்குடி அமைப்பை அக்கட்சி கோட்டை விட்டுள்ளது. இது, வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.,வின் செல்வாக்கு சரிவதை காட்டுகிறது.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில், முதல்வர் லால்துஹோமா தலைமையில், சோரம் மக்கள் இயக்கம் ஆட்சி நடக்கிறது.
நம்பிக்கை
இங்கு, லாங்ட்லாய் மாவட்டத்தில் உள்ள கமலாநகரில், சி.ஏ.டி.சி., எனப்படும், சக்மா தன்னாட்சி மாவட்ட கவுன்சில் என்ற அமைப்பு உள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின் ஆறாவது அட்டவணையின்படி, சக்மா இன மக்களுக்காக 1972ல் இந்த கவுன்சில் நிறுவப்பட்டது. சி.ஏ.டி.சி., எல்லைக்குள் ஒதுக்கப்பட்ட துறைகள் மீது நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரங்களை இந்த கவுன்சில் பயன்படுத்துகிறது.
சிறிய அமைப்பாக இருந்தாலும், தனித்துவமான அடையாளத்தையும், நீண்ட வரலாற்றையும் கொண்ட ஒரு பவுத்த பழங்குடி சமூகத்தின் எண்ணங்களை இந்த கவுன்சில் பிரதிபலிக்கிறது.
சக்மா தன்னாட்சி மாவட்ட கவுன்சிலின் நிர்வாகப் பொறுப்பு, பா.ஜ.,வுக்கு கடந்த பிப்ரவரியில் கிடைத்தது. 2023ல் நடந்த மிசோரம் சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவிய அக்கட்சிக்கு, இது ஒரு புத்துணர்ச்சியை அளித்தது.
இந்த கவுன்சில் வாயிலாக கட்சியை வளர்த்து விடலாம் என, பா.ஜ., கணக்கு போட்டது. எனினும், ஆளும் சோரம் மக்கள் இயக்கத்திடம் இந்த கவுன்சிலை, நான்கு மாதங்களிலேயே பா.ஜ., தாரைவார்த்து விட்டது.
சமீபத்தில், பா.ஜ., தலைமையிலான சக்மா தன்னாட்சி மாவட்ட கவுன்சில் நிர்வாகத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தலைமை நிர்வாக உறுப்பினர் மோலின் குமார் சக்மாவை பதவிநீக்கம் செய்ய, மொத்தமுள்ள 17 பேரில் 15 பேர் ஓட்டளித்தனர்.
கருத்து வேறுபாடு
மிசோரமில் வளர்ந்து வரும் பிராந்திய கட்சியான ஆளும் சோரம் மக்கள் இயக்கம், 20 பேர் அடங்கிய கவுன்சிலில், தற்போது பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.
பா.ஜ.,வின் இந்த வீழ்ச்சி திடீரென நடக்கவில்லை. அக்கட்சியில் நிலவிய கருத்து வேறுபாடு கள், நிர்வாகிகள் ராஜினாமா, மேலிட தலைவர்களுக்கும் உள்ளூர் அரசியலுக்கும் இடையே உள்ள இடைவெளி போன்றவையே காரணம்.
சி.ஏ.டி.சி., கவுன்சில் தலைவர் லக்கன் சக்மா உட்பட 12 பா.ஜ., உறுப்பினர்கள், வெளிப்படைத்தன்மை மற்றும் உள்ளூர் ஈடுபாடு இல்லாததைக் காரணம் காட்டி, சோரம் மக்கள் இயக்கத்தில் ஐக்கியமாகினர்.
மிசோரமில் கட்சியை வளர்க்க தேசிய கட்சியான பா.ஜ.,வுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்த நிலையில், அதை அக்கட்சியின் மேலிட தலைவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை.
மிசோரமின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் பழங்குடி சமூகங்களுடன் ஒத்துப்போகாததே பா.ஜ.,வின் வீழ்ச்சிக்கு காரணம்.
சி.ஏ.டி.சி., கவுன்சிலில் தற்போது, சோரம் மக்கள் இயக்கம் பெரும்பான்மையுடன் உள்ளது. ஏற்கனவே மிசோரமில் ஆளுங்கட்சியாக உள்ள அக்கட்சிக்கு, இது கூடுதல் பலத்தை அளித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களை பொறுத்தவரை, பிராந்திய கட்சிகள் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் தங்களை உறுதிப்படுத்திக் கொள்கின்றன.
திரிபுராவில், திப்ரா மோத்தா கட்சி பழங்குடி அரசியலில் ஒரு வலிமையான சக்தியாக உருவெடுத்துள்ளது.
அதே போல், அசாமின் போடோலாந்தில் உள்ளூர் கட்சிகள், அரசியலின் மையப்புள்ளியாக தொடர்ந்து இருக்கின்றன.
பெரிய நம்பிக்கை
சி.ஏ.டி.சி., கவுன்சில் விவகாரம் இந்தப் போக்கை மேலும் வலுப்பெற செய்துள்ளது.- வடகிழக்கு மாநிலங்களில், பிராந்திய அடையாளமும், உள்ளூர் நிர்வாகமும் சக்திவாய்ந்த நாணயங்களாக இருக்கின்றன என்பது நிரூபணமாகிறது.
பா.ஜ.,வை பொறுத்தவரை, சி.ஏ.டி.சி., கவுன்சில் பெரிய நம்பிக்கையாக இருந்தது. இதை நம்பியே அக்கட்சி மேலிடம் பல திட்டங்களை வைத்திருந்தது.
தற்போது இந்த கவுன்சில் கையை விட்டு போயுள்ளதால், பா.ஜ.,வினர் நம்பிக்கை இழந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நெருங்கி வருவதால், தன் அணுகுமுறையை பா.ஜ., மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பழங்குடி சமூகங்கள், பிராந்திய மக்களுடன் எவ்வாறு ஒத்துப்போக வேண்டும் என, அக்கட்சி கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஓட்டுகள் வாயிலாக வெற்றிபெற்று விடலாம் என பா.ஜ., கருதினால், அது வேலைக்கு ஆகாது.
அந்த பிராந்தியத்தை பொறுத்தவரை, உள்ளூர் மக்களின் இதயங்களையும், மலைகளின் கலாசாரத்தையும் வெல்ல வேண்டும். இதை செய்யவில்லை என்றால், பா.ஜ., செல்வாக்கு சரிவதை யாராலும் தடுக்க முடியாது
- நமது சிறப்பு நிருபர் - .