ரூ.88 கோடி போதை பொருள் பறிமுதல்: அசாமில் சர்வதேச கடத்தல் கும்பல் கைது
ரூ.88 கோடி போதை பொருள் பறிமுதல்: அசாமில் சர்வதேச கடத்தல் கும்பல் கைது
ரூ.88 கோடி போதை பொருள் பறிமுதல்: அசாமில் சர்வதேச கடத்தல் கும்பல் கைது

இம்பால்: வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூரில் அதிரடி சோதனை நடத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், 88 கோடி ரூபாய் மதிப்புள்ள, 110 கிலோ, 'மெத் ஆம் பெட்டமைன்' போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, போதைப் பொருளை ஒழிப்பதில் மிகத் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
வடகிழக்கு மாநிலங்கள் வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, ஒவ்வொரு மாநிலங்களின் தலைநகரங்களில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டலங்கள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், மணிப்பூரின் தவுபல் மாவட்டத்தில் உள்ள லிலாங் பகுதி அருகே, போதைப் பொருள் கடத்தப்படுவதாக, கடந்த 13ம் தேதி, இம்பால் மண்டலத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, அப்பகுதியில் வாகன தணிக்கை நடத்திய அதிகாரிகள், அங்கு வந்த லாரியில் சோதனையிட்டனர். 102.39 கிலோ மெத் ஆம் பெட்டமைன் போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதே நாளில், அசாம் - -மிசோரம் எல்லையில் உள்ள சில்சார் அருகே, ஒரு சொகுசு காரை நிறுத்தி, குவஹாத்தி மண்டலத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர்.
அப்போது, 7.48 கிலோ மெத் ஆம் பெட்டமைன் போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக, சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு கருணையே கிடையாது. போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இம்பால், குவஹாத்தி மண்டலங்களில், 88 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகளுக்கு பாராட்டுகள். போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்.
அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.
விமானத்தில் சென்று 'சப்ளை' செய்த பெண்கள்
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்த பம்பா பான்டோ, 31, மற்றும் அபிகைல் அடோனிஸ், 30, ஆகிய இரு பெண்களும் டில்லியில் சில ஆண்டுகளாக வசித்து வந்தனர்.
இருவரும், எம்.எம்.டி.ஏ., என்ற போதைப்பொருளை, நாடு முழுதும் விமானத்தில் சென்று வினியோகித்து வந்தனர்.
இதற்காக கடந்த ஆண்டில் மட்டும் இருவரும், 37 முறை மும்பைக்கும், 22 முறை பெங்களூருக்கும் விமான பயணம் மேற்கொண்டனர்.
மங்களூரைச் சேர்ந்த ஹைதர் அலி என்பவரை ஆறு மாதங்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த பெண்களை பற்றிய தகவல்களை தெரிவித்தார்.
இதன் அடிப்படையில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பீட்டர் என்பவரை, சில நாட்களுக்கு முன், போதைப் பொருளுடன் கைது செய்த போலீசார், நேற்று இரு பெண்களையும் கைது செய்தனர்.
இந்த பெண்களிடம் இருந்து, 75 கோடி ரூபாய் மதிப்புள்ள எம்.எம்.டி.ஏ., போதைப்பொருள், நான்கு மொபைல் போன்கள், இரண்டு பாஸ்போர்ட் மற்றும் 18,000 ரூபாயை பறிமுதல் செய்துள்ள கர்நாடகா போலீசார், இருவரிடமும் தீவிரமாக விசாரிக்கின்றனர்.,