காலக்கெடுவை விட இந்திய நலனே முக்கியம்: அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பியூஷ் கோயல் கருத்து
காலக்கெடுவை விட இந்திய நலனே முக்கியம்: அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பியூஷ் கோயல் கருத்து
காலக்கெடுவை விட இந்திய நலனே முக்கியம்: அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பியூஷ் கோயல் கருத்து
ADDED : ஜூலை 04, 2025 10:28 PM

புதுடில்லி: குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை முடிவு செய்ய வேண்டும் என்ற அவசரத்தில் இந்தியா செயல்படவில்லை. இரு நாடுகளும் பலன்பெறும் வகையில் முடிவுகள் இருந்தால் மட்டுமே ஏற்று கொள்வோம் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை கையெழுத்திட உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த வாரம் தெரிவித்திருந்தார். எனினும், இருநாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி நீடித்து வருகிறது.
அன்னிய முதலீடுகளை அனுமதிக்காமல் நீண்ட காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் விவசாயம், பால்வளம் ஆகியவற்றில் சந்தையை திறந்துவிட அமெரிக்கா கோரி வருகிறது. இதற்கு, இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், இதனை வரும் 9 ம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். இந்த காலக்கெடு நெருங்குவதால் பேச்சுவார்த்தை அதற்குள் முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும், இந்தியாவின் நலனை உறுதி செய்யக்கூடியதாகவும் இருக்க வேண்டும். நாட்டின் நலனே எப்போதும் முக்கியம். அதனை மனதில் வைத்துக் கொண்டு, சிறந்த ஒப்பந்தத்தை தயார் செய்தால் வளர்ந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்தியா தயாராக உள்ளது.
ஐரோப்பிய யூனியன், நியூசிலாந்து,ஓமன், அமெரிக்கா, சிலி மற்றும் பெரு உள்ளிட்ட நாடுகளுடன் ஆலோசனை நடக்கிறது. அதில் ஒப்பந்தம் தொடர்பாக பல நாடுகளுடன் பேச்சு நடக்கிறது. பரஸ்பரம் நலன் பயக்கும் வகையில் இருந்தால் மட்டுமே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகும்.
குறிப்பிட்ட காலக்கெடு அல்லது அழுத்தங்களின் அடிப்படையில் வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட மாட்டோம். நன்கு முதிர்ச்சியடைந்த, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, நாட்டின் நலன் உறுதி செய்யப்படும் போது மட்டுமே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.