Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பன்னாட்டு மாநாடு அறிக்கையில் இந்தியா கையெழுத்திட மறுப்பு

பன்னாட்டு மாநாடு அறிக்கையில் இந்தியா கையெழுத்திட மறுப்பு

பன்னாட்டு மாநாடு அறிக்கையில் இந்தியா கையெழுத்திட மறுப்பு

பன்னாட்டு மாநாடு அறிக்கையில் இந்தியா கையெழுத்திட மறுப்பு

UPDATED : ஜூன் 26, 2025 11:57 PMADDED : ஜூன் 26, 2025 11:44 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி : சீனா தலைமையில் நடந்த பன்னாட்டு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற இந்தியா, அதன் முடிவில் வெளியிட இருந்த கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுத்து விட்டது.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை பாதுகாக்க சீனா பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தன் எதிர்ப்பை பதிவு செய்தார்.

உச்சி மாநாடு


எஸ்.சி.ஓ., அல்லது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது 10 நாடுகள் கொண்ட கூட்டமைப்பு. சீனா, இந்தியா, ரஷ்யா, ஈரான், பெலாரஸ், பாகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகியவை இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள்.

சீன நகரமான கிங்டாவோவில் உச்சி மாநாடு நடந்தது. பிராந்திய, சர்வதேச பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்க மாநாடு கூட்டப்பட்டது. இப்போது அதன் தலைவர் என்ற வகையில் சீனா, இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது.

இந்தியா சார்பாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். மாநாட்டுக்கு முன்னரே அவர் இந்தியாவின் நிலை என்ன என்பதை பேட்டிகள் வாயிலாக சொல்லி விட்டார்.

''பயங்கரவாதம் என்பது தேசிய எல்லைகள் குறித்த கவலையே இல்லாத செயல்பாடு. அப்பாவி மக்களை கொலை செய்யும் எவராக இருந்தாலும், அவர்களை குறிப்பிட்ட நாட்டின் குடிமக்கள் என்று குறிப்பிடவே கூடாது.

''அவர்கள் பயங்கரவாதிகள், அவ்வளவு தான். பயங்கரவாதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அழித்து ஒழிக்கப்பட வேண்டும்,'' என ராஜ்நாத் சொன்னார்.

அதோடு நிற்கவில்லை. ''சில நாடுகள் ராணுவ பலமோ, தார்மீக பலமோ இல்லாத காரணத்தால், பயங்கரவாதிகளை ஏவி விட்டு மற்ற நாடுகளில் நாசவேலை நடத்துகின்றன.

''பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவம் கொடுத்து, பயங்கரவாதிகளுக்கு பணம் அல்லது ஆயுதம் அல்லது பயிற்சி கொடுக்கும் நாடுகளையும் தண்டித்தே தீர வேண்டும்,'' என்று ராஜ்நாத் அழுத்தமாக சொன்னார்.

பெயரை சொல்லாவிட்டாலும், அவர் குறிப்பிடுவது பாகிஸ்தானை தான் என்பது எல்லாருக்கும் தெரிந்தது. பஹல்காமில் 26 ஹிந்து சுற்றுலா பயணியரை, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற கொடூர சம்பவம் குறித்து, மாநாட்டில் ராஜ்நாத் சிங் நிச்சயமாக பிரச்னை கிளப்புவார் என்பதும் புரிந்தது.

மாநாட்டை முன்னின்று நடத்தும் சீனா, பாகிஸ்தானின் பாதுகாவலன் என்பதால், நண்பனை காப்பாற்ற தேவையானதை செய்தது.

எந்த பயங்கரவாத சம்பவத்தை பற்றியும் குறிப்பிட்டு பேச இடம் கொடுக்காமல், மாநாட்டின் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்தது. இறுதியாக வெளியிட இருந்த கூட்டறிக்கையில், பஹல்காம் சம்பவம் பற்றி எதுவுமே குறிப்பிடாமல் தவிர்த்தது.

அதே சமயம், பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாநிலத்தில் நடக்கும் அரசுக்கு எதிரான பயங்கரவாதத்தை துாண்டுவது கண்டனத்துக்கு உரியது என அறிக்கையில் குறிப்பிட்டது.

இந்தியாவின் பெயரை சொல்லாவிட்டாலும், அந்த வாக்கியம் நமக்கு எதிரானது தான் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை.

நிகழ்த்திய கொடுமை


குப்புற தள்ளிய குதிரை, குழியும் பறித்ததாம் என்பது போல, இந்தியாவின் பஹல்காமில் பாகிஸ்தான் நிகழ்த்திய கொடுமையை தொடாமல் விட்டதோடு நில்லாமல், பலுசிஸ்தான் சம்பவத்துக்கு இந்தியா மீது பழி போடும் பாவத்தையும் சீனா செய்ததை பார்த்து ராஜ்நாத் சிங் கடுப்பாகி விட்டார்.

எனவே, கூட்டறிக்கையில் கையெழுத்திட மாட்டேன் என கூறிவிட்டார். இதனால், மாநாடு முடிவில் கூட்டறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

சீனா தலைமையில் நடந்த மாநாட்டில், இந்தியா பகிரங்கமாக எதிர்ப்பை பதிவு செய்திருப்பது, சர்வதேச அளவில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us