இடைத்தேர்தல்களில் இண்டியா கூட்டணி அபார வெற்றி!
இடைத்தேர்தல்களில் இண்டியா கூட்டணி அபார வெற்றி!
இடைத்தேர்தல்களில் இண்டியா கூட்டணி அபார வெற்றி!
UPDATED : ஜூலை 13, 2024 11:31 PM
ADDED : ஜூலை 13, 2024 11:26 PM

புதுடில்லி: ஏழு மாநில சட்டசபை இடைத்தேர்தல்களில், 'இண்டியா' கூட்டணி 10 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ., இரண்டு இடங்களை மட்டுமே பிடித்தது.
லோக்சபா தேர்தலை அடுத்து நடந்த முதல் இடைத் தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. லோக்சபா தேர்தலில் வென்றதால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தது, மறைவு போன்ற காரணங்களால் இந்த இடைத் தேர்தல் நடந்தது.
அதிர்ச்சி
நேற்று ஓட்டு எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்த தொகுதிகள் 13ல், இண்டியா கூட்டணி கட்சிகள் 10 இடங்களை கைப்பற்றின. பா.ஜ., இரண்டு இடங்களில் வென்றது. ஒரு தொகுதியில் சுயேச்சை வென்று அதிர்ச்சி அளித்தார்.
தமிழகம், பஞ்சாப், ம.பி., பீஹார் மாநிலங்களில் தலா ஒரு தொகுதி, உத்தரகண்டில் 2, ஹிமாச்சலில் 3, மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகள் தேர்தலை சந்தித்தன.
தமிழகத்தின் விக்கிரவாண்டியில் பா.ஜ., ஆதரவுடன் போட்டியிட்ட பா.ம.க.,வை, மிகப்பெரிய ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க., தோற்கடித்தது.
பஞ்சாபில் ஆம் ஆத்மியில் இருந்து பா.ஜ.,வுக்கு தாவிய எம்.எல்.ஏ.,வை அக்கட்சி வேட்பாளராக நிறுத்தியது. அவரை கணிசமான ஓட்டு வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வீழ்த்தியது.
மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற நான்கில் மூன்று தொகுதிகள் பா.ஜ., வசம் இருந்தவை.
பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தரகண்டில் தேர்தல் நடந்த 2 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியது. குறிப்பாக, ஹிந்துக்களின் புனித தலமான பத்ரிநாத் தொகுதியை அக்கட்சி தட்டிப்பறித்தது.
அயோத்தி நகரை உள்ளடக்கிய உ.பி.,யின் பைசாபாத் லோக்சபா தொகுதியை தொடர்ந்து பத்ரிநாத்தும் கையைவிட்டு போனது, பா.ஜ.,வில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது. மற்றொருவர் காங்கிரசில் இருந்து பா.ஜ.,வுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ.,
ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வென்ற இரு தொகுதிகளும் கடந்த முறை சுயேச்சைகள் வசம் இருந்தன.
காங்கிரஸ் அரசுக்கு எதிராக வியூகம் அமைக்க சுயேச்சைகளை சுவீகரித்த பா.ஜ., இருவரையும் இத்தேர்தலில் அதிகாரப்பூர்வமாக களம் இறக்கியது.
கடைசி நேரத்தில் கட்சி மாறி வந்தவர்களுக்கு அக்கட்சி அளித்த வாய்ப்புகள் இழப்பிலேயே முடிகின்றன. இம்மாநிலத்தில் ஒரு தொகுதியை அக்கட்சி தக்கவைத்துக் கொண்டது.
லோக்சபா தேர்தலிலும், அடுத்து வந்த ராஜ்யசபா தேர்தலிலும் பாரதிய ஜனதாவிடம் அடி வாங்கிய ஹிமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, இடைத்தேர்தல் வெற்றியால் பழி தீர்த்துக் கொண்டார். தேரா தொகுதியில் அவரது மனைவி கமலேஷ் வெற்றி பெற்றார்.
எதிர்பாராத வெற்றி
முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.,வும் கூட்டணி அமைத்துள்ள பீஹாரின் ரூபாலி தொகுதியில், எதிர்பாராத விதமாக சுயேச்சை வேட்பாளர் வென்றார்.
எனினும், அவர் நீண்டகாலமாக மாநில அரசியலில் பிரபலமாக விளங்கும் நபர். வன்முறைக்கு பெயர் போன ஒரு அமைப்பின் தலைவராக இருந்தவர். அங்கே ஐக்கிய ஜனதா தளம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
ஹிமாச்சல் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா ஒரு இடங்களில் மட்டுமே பா.ஜ., வென்றது. மற்ற மாநில இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியே வென்ற நிலையில், உத்தரகண்டில் இரண்டு தொகுதிகளிலும் அங்கு ஆளும் பா.ஜ., தோல்வி அடைந்தது.
காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க., ஆம் ஆத்மி ஆகியவை இண்டியா கூட்டணியில் இருந்தாலும், மேற்கு வங்கத்திலும், பஞ்சாபிலும் காங்கிரசுக்கு எதிராக திரிணமுல் காங்., மற்றும் ஆம் ஆத்மி போட்டியிட்டன.
இடைத்தேர்தல் முடிவு கள் இண்டியா கூட்டணிக்கு உற்சாகம் அளித்துள்ளன. விரைவில் வர இருக்கும் மூன்று மாநில சட்டசபை தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள இது உதவும் என தலைவர்கள் நம்புகின்றனர்.
பா.ஜ., வட்டாரத்தில் அதிர்ச்சி தெரிகிறது. பா.ஜ.,வின் ஆணவத்துக்கு விழுந்த இரண்டாவது அடி என்கிறது காங்கிரஸ்.