காங்கிரஸ் பரப்பும் அவதுாறுகளை கண்டு ஒருபோதும் அஞ்ச மாட்டேன்: பயங்கரவாதிகளை ஆதரிக்கிறது என்றும் மோடி புகார்
காங்கிரஸ் பரப்பும் அவதுாறுகளை கண்டு ஒருபோதும் அஞ்ச மாட்டேன்: பயங்கரவாதிகளை ஆதரிக்கிறது என்றும் மோடி புகார்
காங்கிரஸ் பரப்பும் அவதுாறுகளை கண்டு ஒருபோதும் அஞ்ச மாட்டேன்: பயங்கரவாதிகளை ஆதரிக்கிறது என்றும் மோடி புகார்
UPDATED : செப் 15, 2025 10:52 AM
ADDED : செப் 15, 2025 12:29 AM

குவஹாத்தி: “நான் சிவபெருமானின் பக்தன், அவதுாறுகளை கண்டு ஒருபோதும் அஞ்ச மாட்டேன். அவதுாறு என்ற விஷத்தை விழுங்கி விடுவேன்,” என காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மேலும், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின்போது, நம் ராணுவத்தின் பக்கம் நிற்காமல், பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகள் பக்கம் காங்கிரஸ் நின்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.
பீஹாரில் சமீபத்தில் நடந்த காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டத்தின்போது, மேடையேறிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மோடி குறித்து அவதுாறாக பேசினார். இதனால் எழுந்த சர்ச்சை அடங்குவதற்குள், காங்கிரஸ் சார்பில், பிரதமர் மோடியின் தாயார் முகச்சாயலுடன் கூடிய ஒருவர் இடம்பெறும் செயற்கை நுண்ணறிவு வீடியோ வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மிசோரம், மணிப்பூர், அசாம், மேற்கு வங்கம், பீஹார் என வடகிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் பிரதமர் மோடி மூன்று நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
அசாம் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் முடிவுற்ற திட்டங்களை நேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து தரங் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியினர் என்னை குறிவைத்து அவதுாறு பரப்பி வருவதை நான் நன்கு அறிவேன். மக்கள் தான் எனக்கு கடவுள்; என் வலிகளை அவர்களிடம் வெளிப்படுத்தாமல் வேறு யாரிடம் வெளிப்படுத்துவேன். மக்கள் தான் எனக்கு குரு, தெய்வம். அவர்கள் தான் என்னை இயக்குபவர்கள். என்னை இயக்கும், 'ரிமோட் கன்ட்ரோல்' வேறு யாரிடமும் இல்லை.
நான் சிவபெருமானின் பக்தன். அவதுாறு என்ற விஷத்தை அப்படியே விழுங்கி விடுவேன்.
* காங்., மீது விமர்சனம்
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, நம் ராணுவத்திற்கு பக்கபலமாக நிற்காமல், பாகிஸ்தான் வளர்த்த பயங்கரவாதிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. நம் நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கும் ஊடுருவல்காரர்களுக்கும், தேசவிரோத சக்திகளுக்கும் காங்கிரஸ் உறுதுணையாக இருக்கிறது.
கடந்த 1962ம் ஆண்டு, சீன போரின் போது, காங்கிரசின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஏற்படுத்திய காயங்களில் இருந்து அசாம் மக்கள் இதுவரை மீளவே இல்லை.
நம் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஊடுருவல்காரர்களை, பா.ஜ., ஒருபோதும் அனுமதிக்காது. நம் நிலத்தை அபகரிக்க விடமாட்டோம்.
பாரத ரத்னா விருது பெற்ற இந்த மாநிலத்தைச் சேர்ந்த பூபென் ஹசாரிகாவை காங்கிரஸ் அவமதித்தது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. பா.ஜ.,வின் இரட்டை இன்ஜின் அரசு, அசாமின் பெருமைமிக்க புதல்வரான பூபென் ஹசாரிகா போன்றவர்களின் கனவுகளை நனவாக்கி வருகிறது.
அசாமில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தும், பிரம்மபுத்திராவின் குறுக்கே வெறும் மூன்று பாலங்களை மட்டுமே கட்டி எழுப்பியது. ஆனால், பா.ஜ., ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில், ஆறு பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டன.
உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக, இந்தியா மிளிர்கிறது. இதில், அசாம் மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் மட்டும் 13 சதவீதம். இரட்டை இன்ஜின் அரசு வாயிலாக இந்த சாதனையை எட்ட முடிந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.