Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு

காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு

காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு

காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு

UPDATED : மார் 22, 2025 10:00 AMADDED : மார் 22, 2025 09:51 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு; தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெங்களூரு சாங்கே ஏரியில் முதல் முறையாக காவிரி ஆரத்தி நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.

உலக தண்ணீர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சிறிய நீர்ப்பாசன துறை இணைந்து, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள சாங்கே ஏரியில், நேற்று 'காவிரி ஆரத்தி' நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

காவிரி தாய்


முன்னதாக காவிரி பிறப்பிடமான தலக்காவிரிக்கு, துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து, காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை செய்தனர்.

அங்கிருந்து கொண்டு வந்த புனித நீர், சாங்கே ஏரியில் ஊற்றி வழிபாடு நடத்தப்பட்டது.

மாலையில், மல்லேஸ்வரம் கங்கம்மா தேவி உற்சவ மூர்த்தியை, பூரண கும்ப மரியாதையுடன், ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஏரியின் நடுவில் அமைக்கப்பட்ட மிதக்கும் மேடையில், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கங்கம்மா தேவி


துணை முதல்வர் சிவகுமார் தம்பதி, ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், நகரபிவிருத்தி துறை அமைச்சர் பைரதி சுரேஷ் உட்பட முக்கிய பிரமுகர்கள் தேவிக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

பின், சாங்கே ஏரிக்கு ஆரத்தி காண்பித்து, வணங்கினர். ராம்பிரசாத் மனோகர் அனைவரையும் வரவேற்றார்.

இதையடுத்து, உலக தண்ணீர் தினத்தை ஒட்டி, 'அனைவரும் தண்ணீரை பாதுகாப்போம்' என்ற விழிப்புணர்வு உறுதிமொழியை துணை முதல்வர் சிவகுமார் வாசித்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

உறுதி மொழி

இதே வேளையில், ஆன்லைனிலும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் ஒரே நேரத்தில் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இது உலக சாதனை என்று துணை முதல்வர் தெரிவித்தார்.

பின், அவர் பேசியதாவது:

கங்கா ஆரத்தி போன்று, முதல் முறையாக, பெங்களூரில் காவிரி ஆரத்தி நிகழ்ச்சி நடத்தப்படுவது பெருமைக்குரிய விஷயம். உலக வரலாற்றில் முதல் முறையாக, தண்ணீர் பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கானோர் ஒரே முறை விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்து கொள்வது சிறப்பு.

இது போன்று, இந்தாண்டு தசரா விழாவின் போது, கே.ஆர்.எஸ்., அணையிலும் முதல் முறையாக காவிரி ஆரத்தி நிகழ்ச்சி நடத்தப்படும். இதற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராம்பிரசாத் மனோகர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தண்ணீரை பாதுகாப்போம். தண்ணீர் பஞ்சத்தை தவிர்ப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தண்ணீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை, நாளை வரை ஆன்லைனில் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை ஒட்டி, சாங்கே ஏரி சுற்றியுள்ள வேலி மற்றும் மரங்கள், மின் விளக்குகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

Image 1395641

பிரபல பாடகர்கள் அனன்யா பட், ரகு தீட்சித் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு பாடலுக்கும் குழுமியிருந்த பார்வையாளர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர். பாடலுக்கு ஏற்ப லேசர் விளக்குகளும் நடனமாடுவது போன்று அமைக்கப்பட்டிருந்தது.

வாரிய தலைவருக்கு பாராட்டு


காவிரி ஆரத்தி நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்கு, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவரும், தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த மூத்த ஐ.ஏஎஸ் அதிகாரியுமான ராம்பிரசாத் மனோகரின் பெரும் முயற்சியே காரணம் என்று, பலரும் பாராட்டினர்.

விழாக்கோலம்


மொத்தத்தில் நகரின் மையப்பகுதியில் உள்ள சாங்கே ஏரி, விழா கோலம் பூண்டு, மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. வி.வி.ஐ.பி., - வி.ஐ.பி., சிறப்பு பாஸ், ஊடகத்தினர் என தனித்தனியாக பாஸ்கள் வினியோகம் செய்யப்பட்டன. அனைவரும் வெவ்வேறு நுழைவு வாயில் வழியாக அனுமதிக்கப்பட்டனர். பொது மக்களின் பாதுகாப்பாக முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக, தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள், ரப்பர் படகுகளில், ஏரியில் உலா வந்த வண்ணம் இருந்தனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு, தலக்காவிரியில் இருந்து கொண்டு வந்திருந்த காவிரி புனித தீர்த்தம், நந்தினி இனிப்பு வழங்கப்பட்டன.

ஏரியில் மிதக்கும் மேடையை, மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் அமைத்திருந்தது. வாரணாசியை சேர்ந்த 60 பேர் கொண்ட குழுவும்; கோவை ஈஷாவை சேர்ந்த 40 பேர் கொண்ட குழுவும் காவிரி ஆரத்தி நிகழ்ச்சியை நடத்தினர். பெங்களூரை சேர்ந்த 9 புரோகிதர்கள் கொண்ட குழு, வேத கோஷங்கள் முழங்கினர். நிகழ்ச்சியை 25,000க்கும் அதிகமானோர் நேரிலும்; ஆயிரக்கணக்கானோர் இணையதளத்திலும் நேரலையில் பார்வையிட்டனர். எதிர்பார்த்ததை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். சாங்கே ஏரியை சுற்றி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us