Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பீஹாரில் கூட்டணி கட்சிகளை எப்படி சமாளிக்க போகிறார் தேஜஸ்வி யாதவ்?

பீஹாரில் கூட்டணி கட்சிகளை எப்படி சமாளிக்க போகிறார் தேஜஸ்வி யாதவ்?

பீஹாரில் கூட்டணி கட்சிகளை எப்படி சமாளிக்க போகிறார் தேஜஸ்வி யாதவ்?

பீஹாரில் கூட்டணி கட்சிகளை எப்படி சமாளிக்க போகிறார் தேஜஸ்வி யாதவ்?

ADDED : ஜூன் 17, 2025 02:52 AM


Google News
Latest Tamil News
பீஹாரில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதில் வெற்றி பெறுவது என்பது, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.

தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல விவகாரங்களை மிகவும் உன்னிப்பாக கையாள வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டு உள்ளது.

எதிர்பார்ப்பு


பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ளது.

தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பணியாற்றி வருகிறது.

இந்த கூட்டணியில், ஐக்கிய ஜனதா தளம், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி, மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் - கம்யூ., கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சி கூட்டணி, பீஹாரில் 'மஹாகட்பந்தன்' கூட்டணி என்ற பெயரிலும், தேசிய அளவில் 'இண்டி' கூட்டணி என்ற பெயரிலும் செயல்படுகின்றன.

பார்லி., மழைக்காலக் கூட்டத்தொடர் முடிந்ததும், செப்டம்பரில் பீஹார் சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், பீஹாரில் தற்போதே தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் துவங்கி உள்ளது.

கடந்த 2020 சட்டசபை தேர்தலின் போது, தேஜஸ்வியின் தந்தையும், முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்கில், ஜார்க்கண்டின் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

எனினும் மனம் தளராத தேஜஸ்வி, தனி ஆளாக தேர்தல் பிரசாரத்தை கையாண்டார். மாநிலம் முழுதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் பலனாக, 75 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் உருவானது.

எனினும், அதன் கூட்டணி கட்சியான காங்., 70 தொகுதிகளில் போட்டியிட்டு, 19ஐ மட்டுமே கைப்பற்றியதால், தேஜஸ்வியின் முதல்வர் கனவு தகர்ந்தது.

முதல்வர் நாற்காலி


மொத்தம் 243 எம்.எல்.ஏ.,க்கள் உடைய பீஹார் சட்டசபையில், ஆளும் பா.ஜ., கூட்டணிக்கு, 125; மஹாகட்பந்தன் கூட்டணிக்கு 110 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

கடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் நாற்காலியை தவற விட்ட தேஜஸ்வி, இந்த முறை அதை கைப்பற்றும் நோக்கில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதற்காக, தே.ஜ., கூட்டணியில் இல்லாத கட்சிகளை ஒருங்கிணைத்து, வலிமையான மஹாகட்பந்தன் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், எதிர் வரும் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளில், 145 தொகுதிகளில் போட்டியிட தேஜஸ்வி யாதவ் முடிவு செய்துள்ளார்.

மீதமுள்ள 98 தொகுதிகளை, காங்., - இ.கம்யூ., - மார்க்.கம்யூ., - மார்க்., -லெனினிஸ்ட் விடுதலை - விகாஷ்ஷீல் இன்சான் கட்சி ஆகியவற்றுக்கு பகிர்ந்தளிக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விகாஷ்ஷீல் இன்சான் கட்சி தலைவர் முகேஷ் சாஹ்னிக்கு, மீனவர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. மேலும், 6 சதவீத ஓட்டுகள் உள்ளன. 2020 தேர்தலில், தே.ஜ., கூட்டணியில் இருந்த முகேஷ் சாஹ்னி, தற்போது மஹாகட்பந்தன் கூட்டணியில் இடம் பெற்றுள்ளார்.

தன் கட்சிக்கு குறைந்தபட்சம் 60 இடங்களையும், துணை முதல்வர் பதவிக்கான உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முகேஷ் சாஹ்னி எழுப்பியது, கூட்டணி கட்சி தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதே போல, தங்களது கட்சிக்கு 45 இடங்கள் ஒதுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியும் கோரிக்கையை வைத்தது.

முரண்டு


கடந்த சட்டசபை தேர்தலில், 19 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி, 12 இடங்களில் வென்றது. இதை கருதி, தற்போது அதிக தொகுதிகளை அக்கட்சி கேட்கிறது.

சிறிய கட்சிகளே இப்படி முரண்டு பிடிக்கும் போது, காங்., மட்டும் எப்படி அமைதியாக இருக்கும்? கடந்த முறை போல், இந்த முறையும் 70 தொகுதிகளில் களமிறங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.

இந்த கோரிக்கைகளுக்கு எல்லாம் ஒப்புதல் அளிக்கக்கூடிய இடத்தில் தேஜஸ்வி உள்ளார். மஹாகட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான அவர், கூட்டணி கட்சிகளை சமாளிக்க என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

எப்படியும் இந்த தேர்தல், தேஜஸ்வி யாதவுக்கு எளிதாக இருக்கப் போவதில்லை என்பது மட்டும் நிதர்சனம்.

- நமது சிறப்பு நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us