நக்சல் வேட்டையில் வீரச்செயல்: ஏழு கமாண்டோக்களுக்கு 'சவுரிய சக்ரா' விருது
நக்சல் வேட்டையில் வீரச்செயல்: ஏழு கமாண்டோக்களுக்கு 'சவுரிய சக்ரா' விருது
நக்சல் வேட்டையில் வீரச்செயல்: ஏழு கமாண்டோக்களுக்கு 'சவுரிய சக்ரா' விருது
ADDED : மே 24, 2025 12:35 AM

புதுடில்லி: நக்சல்கள் வேட்டையில் வீர மரணம் அடைந்த இரு கமாண்டோக்கள் உட்பட ஏழு சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு ராணுவத்தின் உயரிய கவுரவமான 'சவுரிய சக்ரா' விருது அளிக்கப்பட்டது.
நக்சல்கள் ஆதிக்கம் மிகுந்த சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள டெக்கல்குடியம் என்ற இடத்தில், 2024 ஜன., 30ல் சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், 150வது பட்டாலியன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
அப்போது, ஏவுகணைகள் போன்ற அதி சக்தி வாய்ந்த, கையெறி குண்டுகளின் குவியல்களை நக்சல்கள் அடுத்தடுத்து வெடிக்க செய்தனர்.
இந்த சண்டையில், சி.ஆர்.பி.எப்., படையின் கோப்ரா கமாண்டோ படை கான்ஸ்டபிள்கள் பவன் குமார் மற்றும் தேவன் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர்.
இதே சண்டையில், துணை கமாண்டன்ட் லக்வீர், உதவி கமாண்டன்ட் ராஜேஷ் பஞ்சால் மற்றும் கான்ஸ்டபிள் மல்கிட் சிங் ஆகியோர் அச்சமின்றி முன்னேறி சென்று நக்சல்களை சுட்டு வீழ்த்தி காயம் அடைந்தனர்.
இவர்கள் ஐந்து பேருக்கும் வீர தீர செயலுக்கான உயரிய விருதாக கருதப்படும் சவுரிய சக்ரா விருது நேற்று வழங்கப்பட்டது.
மேலும், ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டத்தில், 2023, ஏப்., 3ல் நடந்த நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் வீர தீரத்துடன் செயல்பட்ட சி.ஆர்.பி.எப்., வீரர்களான துணை கமாண்டன்ட் விக்ராந்த் குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெப்ரி ஹமிங்கல்லொ ஆகியோருக்கும் சவுரிய சக்ரா விருது அளிக்கப்பட்டது.
ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டது. வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினர் விருதை பெற்றுக் கொண்டனர்.