இடுக்கியில் பலத்த மழை * அணைகள் திறப்பு
இடுக்கியில் பலத்த மழை * அணைகள் திறப்பு
இடுக்கியில் பலத்த மழை * அணைகள் திறப்பு
ADDED : ஜூன் 13, 2025 01:46 AM

மூணாறு:கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே மே 24ல் துவங்கி ஒரு வாரம் கன மழை பெய்தது. அதன் பிறகு மழை வெகுவாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் துவக்கத்திலேயே இந்த பருவமழை உயிர் பலி உள்ளிட்ட பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது. இந்த மாவட்டத்தில் 150 வீடுகள், ரூ.5.50 கோடியில் விளை நிலம், விளை பொருட்கள் சேதமடைந்தன.
இந்நிலையில் இம்மாவட்டத்தில் ஜூன் 11 மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று பலத்த மழைக்கான ' எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்ட நிலையில் இன்றும் அதே அலர்ட் தொடர்கிறது. அதே போல் நாளை, நாளை மறுநாள் கன மழைக்கான ' ஆரஞ்ச் அலர்ட்' முன்னெச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்தது.
அணைகள் திறப்பு:
பலத்த மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நீர்மட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கல்லார் குட்டி, பாம்ளா ஆகிய அணைகள் திறக்கப்பட்டன.
குறைவு:
இம்மாவட்டத்தில் மே மாதத்தில் மழை அதிகரித்த நிலையில் ஜூனில் குறைந்தது. ஜூன் ஒன்று முதல் நேற்று வரை சராசரி மழை 207.8 மி.மீ., பெய்ய வேண்டும். இதே கால அளவில் இந்தாண்டு 85 மி.மீ., மழை பெய்தது. இது 122.8 மி.மீ., குறைவாகும்.
ஆய்வு:
மாவட்டத்தில் முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்டு படையினர் உடும்பன்சோலை தாலுகாவில் மண் மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் ஆய்வு நடத்தினர். மீட்பு படை இன்ஸ்பெக்டர் சுஜீத் தலைமையில் கேப் ரோடு, பண்ணியாறுகுட்டி, ஸ்ரீ நாராயணபுரம், ரிப்பிள் நீர்வீழ்ச்சி பகுதிகளில் ஆய்வு நடந்தது.