நாட்டின் வடக்கு, மத்திய பகுதிகளில் 6வது நாளாக வீசும் வெப்ப அலை
நாட்டின் வடக்கு, மத்திய பகுதிகளில் 6வது நாளாக வீசும் வெப்ப அலை
நாட்டின் வடக்கு, மத்திய பகுதிகளில் 6வது நாளாக வீசும் வெப்ப அலை
ADDED : ஜூன் 16, 2025 12:55 AM

புதுடில்லி: நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் தொடர்ந்து ஆறாவது நாளாக நேற்று, கடும் வெப்ப அலை வீசியதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். பல நகரங்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்ஷியசை தாண்டியுள்ளது.
உத்தர பிரதேசம், டில்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீஹார் மட்டுமின்றி மலைப் பிரதேசங்களான ஜம்மு - காஷ்மீர், உத்தராகண்டிலும் கடந்த சில நாட்களாக கடும் வெப்பநிலை நிலவுகிறது.
தொடர்ந்து ஆறாவது நாளாக நேற்று, வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் வீசிய வெப்ப அலையால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், 'ஹிமாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் மற்றும் மேற்கு வங்கம், சிக்கிம் போன்ற மாநிலங்களில் பருவ காலத்தை விட 5.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது.
'நாட்டின் பல்வேறு நகரங்களில் அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்ஷியசாக பதிவாகியுள்ளது. ஜம்மு - காஷ்மீர், உத்தராகண்ட் போன்ற மலை வாழிடங்களிலும் வழக்கத்துக்கு மாறாக அதிக வெப்பம் வீசுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக, ராஜஸ்தானின் கங்கா நகர் மற்றும் சுரு நகரங்களில், 46.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மற்றும் கான்பூரில், முறையே 45 மற்றும் 44.9 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.