'கிரேட்டர் பெங்களூரு' ஆணையம் 5 புதிய மாநகராட்சிகளுடன் உதயம்
'கிரேட்டர் பெங்களூரு' ஆணையம் 5 புதிய மாநகராட்சிகளுடன் உதயம்
'கிரேட்டர் பெங்களூரு' ஆணையம் 5 புதிய மாநகராட்சிகளுடன் உதயம்
ADDED : செப் 02, 2025 11:32 PM

பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சியின் வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஐந்து புதிய மாநகராட்சிகளுடன், 'கிரேட்டர் பெங்களூரு' ஆணையம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. மாநில தலை நகரான பெங்களூரில், 1.50 கோடி மக்கள் வசிக்கின்றனர்.
இங்கு ஏராளமான தொழிற்சாலைகள், ஐ.டி., நிறுவனங்கள், எச்.ஏ.எல்., இஸ்ரோ போன்ற முக்கியமான அலுவலகங்கள் உள்ளன. பெங்களூரை, பி.பி.எம்.பி., எனும் பெங்களூரு பெருநகர மெட்ரோபாலிட்டன் நிர்வாகம் நிர்வகித்து வந்தது. இது, இந்தியாவிலேயே நான்காவது பெரிய மாநகராட்சியாக இருந்தது.
நடப்பு நிதியாண்டில், 19,000 கோடி ரூபாய்க்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதிலிருந்து பி.பி.எம்.பி.,யின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம்.
மாநகரின், 198 கவுன்சிலர்கள் சேர்ந்து மேயரை தேர்வு செய்வர். கவுன்சிலர்களுக்கான தேர்தல் கடைசியாக, 2015ம் ஆண்டு நடத்தப்பட்டது. இவர்களின் பதவிக் காலம், 2020ல் முடிவடைந்தது. அதன்பின் ஐந்து ஆண்டுகள் ஆகியும் தேர்தல் நடத்தப்படவில்லை.
துணை முதல்வர் சிவகுமார், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்துக்கான மசோதாவை, சட்டசபையில் கடந்த ஆண்டு தாக்கல் செய்தார். இது, பெங்களூரை ஐந்து மாநகராட்சிகளாக பிரித்து நிர்வாகம் செய்வதை வலியுறுத்தியது. மசோதாவிற்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் கடந்த ஏப்ரலில் ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து, கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கீழ் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, சென்ட்ரல் என, ஐந்து மாநகராட்சிகள் பிரிக்கப்பட்டன.
ஜி.பி.ஏ.,வின் தலைவராக முதல்வர் சித்த ராமையா, துணை தலைவராக சிவகுமார், கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாகி உள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் காங்., - பா.ஜ., - எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உட்பட, 73 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
புதிய ஐந்து மாநகராட்சிகளுக்கும் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பெங்களூரு மாநகராட்சியின் தலைமையகமே ஜி.பி.ஏ.,வின் தலைமையகமாக இருக்கும்.
இந்த ஆணையம் அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டிற்கு வந்தது. இதன்மூலம், பெங்களூரு மாநகராட்சியின் வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.