பரிந்துரை, பாகுபாடு இல்லாமல் அரசு வேலை: அமித் ஷா
பரிந்துரை, பாகுபாடு இல்லாமல் அரசு வேலை: அமித் ஷா
பரிந்துரை, பாகுபாடு இல்லாமல் அரசு வேலை: அமித் ஷா
ADDED : ஜூன் 16, 2025 01:08 AM

லக்னோ: “எவ்வித பரிந்துரைகள் இன்றியும், ஜாதி, மத பாகுபாடுகள் இல்லாமல், தகுதியின் அடிப்படையிலேயே பணி நியமனங்கள் நடக்கின்றன,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு புதிதாக தேர்வான, 12,000 பெண்கள் உட்பட 60,000 போலீசாருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நேற்று நடந்தது.
முன்னேற வேண்டும்
லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று, போலீஸ் பணியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:
பணி நியமனம் பெறும் இளைஞர்களுக்கு இது மிக முக்கியமான நாள். எந்தவித பரிந்துரைகளும் இன்றி பல்வேறு ஜாதி, மதம் மற்றும் மாவட்டங்களில் இருந்து 60,000 பேர் போலீஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுஉள்ளனர்.
நாட்டின் மிகப்பெரிய போலீஸ் படையில் அவர்கள் பங்கெடுத்துள்ளனர். பாதுகாப்பு, சேவை மற்றும் உணர்திறன் போன்ற மந்திரங்களுடன் இளைஞர்களாகிய நீங்கள் முன்னேற வேண்டும்.
உத்தர பிரதேசத்தில் போலீசார் தேர்வு வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்
காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் ஏதாவதொரு பகுதியில், நாள்தோறும் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது.
ஆமதாபாத், ஜெய்ப்பூர், கோவை, டில்லி என, பல பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஜம்மு - காஷ்மீர் நிலை குறித்து அனைவரும் அறிவர். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், நம் நாட்டின் மீது மூன்று முறை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். உரியில் நடந்த தாக்குதலுக்கு, 'சர்ஜிகல் ஸ்டிரைக்' வாயிலாக பதிலடி தரப்பட்டது.
புல்வாமா தாக்குதலுக்கு பின் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பஹல்காம் தாக்குதலுக்கு ஆப்பரேஷன் சிந்துார் வாயிலாக பதிலடி தரப்பட்டது.
ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையால், உலகிற்கு ஒரு செய்தியை பிரதமர் தெரிவித்தார். 'இந்தியர்கள் மீது கை வைப்பவர்கள், கடுமையான எதிர்வினையை சந்திப்பர்' என தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாதத்தை முற்றிலும் அழிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. அதேபோல், அடுத்தாண்டு மார்ச் 31க்குள் நக்சல் பாதிப்பில் இருந்து நாடு விடுபடும்.
முக்கிய பங்கு
மொத்தம் 11 மாநிலங்களில் பரவியிருந்த நக்சல்களின் செயல்பாடுகள், மோடி தலைமையிலான ஆட்சிக்காலத்தில் பெரிதும் குறைந்துள்ளது. தற்போது, மூன்று மாவட்டங்களில் மட்டுமே அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. அதுவும் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.
வரும் 2047க்குள் உலகளாவிய தலைமைகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். இதில், உத்தர பிரதேசம் முக்கிய பங்கு வகிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.