முன்னாள் முதல்வரிடம் ரூ.3 லட்சம் சைபர் மோசடி
முன்னாள் முதல்வரிடம் ரூ.3 லட்சம் சைபர் மோசடி
முன்னாள் முதல்வரிடம் ரூ.3 லட்சம் சைபர் மோசடி
ADDED : செப் 18, 2025 05:17 AM

பெங்களூரு: “என் மூன்று வங்கிக் கணக்குகளை 'ஹேக்' செய்து, சைபர் திருடர்கள் 3 லட்சம் ரூபாயை திருடி உள்ளனர்,” என, கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா தெரிவித்து உள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பதிவாகும் சைபர் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சைபர் கொள்ளையர்களிடம் படித்தவர், படிக்காதவர் என்ற பேதம் எதுவுமின்றி அனைவரும் சிக்குகின்றனர்.
இந்த மோசடி கும்பலை பிடிப்பது, போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. திரைமறைவில் இருந்து கொண்டு தினமும் பல லட்சம் ரூபாய்களை நொடிப்பொழுதில் சைபர் மோசடியாளர்கள் அபகரித்து வருகின்றனர்.
இவர்களிடம் பொது மக்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என அனைத்து மட்டத்தினரும் பணத்தை இழந்து வருகின்றனர். சமீபத்தில் கன்னட நடிகர் உபேந்திரா மற்றும் அவரது மனைவி பிரியங்காவின் மொபைல் போன்களை 'ஹேக்' செய்து, 55,000 ரூபாய் பணத்தை திருடினர்.
இந்நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சதானந்த கவுடாவிடமும் சைபர் திருடர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
இதுகுறித்து நேற்று பெங்களூரில் சதானந்த கவுடா அளித்த பேட்டி:
நேற்று முன்தினம் என் மூன்று வங்கிக் கணக்குகள், சைபர் மோசடி கும்பலால் 'ஹேக்' செய்யப்பட்டன. என் மூன்று வங்கிக் கணக்குகளில் இருந்தும் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 3 லட்சம் ரூபாய் பணம் திருடியுள்ளனர்.
'ஜி பே, போன் பே' உள்ளிட்ட இணைய பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணம் திருடு போனதால், சைபர் போலீசில் புகார் செய்ய உள்ளேன்.
ஹெச்.டி.எப்.சி., - எஸ்.பி.ஐ., மற்றும் ஆக்சிஸ் ஆகிய வங்கிகளினுடைய கணக்குகளில் இருந்து பணம் திருடு போய் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.