Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ தனியார் பல்கலை மாணவரை 50 முறை கன்னத்தில் அறைந்த சக மாணவர்கள்

தனியார் பல்கலை மாணவரை 50 முறை கன்னத்தில் அறைந்த சக மாணவர்கள்

தனியார் பல்கலை மாணவரை 50 முறை கன்னத்தில் அறைந்த சக மாணவர்கள்

தனியார் பல்கலை மாணவரை 50 முறை கன்னத்தில் அறைந்த சக மாணவர்கள்

ADDED : செப் 07, 2025 05:56 AM


Google News
Latest Tamil News
லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்னோவில் தனியார் பல்கலை மாணவர் ஒருவரை, சக மாணவர்கள் சரமாரியாக 50 முறைக்கு மேல் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் லக்னோவை அடுத்த மல்ஹோரில், தனியாருக்கு சொந்தமான அமிட்டி பல்கலை இயங்கி வருகிறது. இங்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் உயர் கல்வி பயின்று வருகின்றனர். லக்னோவைச் சேர்ந்த ஷிகர் என்பவர் சட்டப் படிப்பில் இரண்டாமாண்டு பயின்று வருகிறார்.

இவரை, பல்கலை வாகன நிறுத்தும் இடத்தில் கார் ஒன்றில் வைத்து சக மாணவர்கள் இருவர் சரமாரியாக, 50க்கும் மேற்பட்ட முறையில் கன்னத்தில் அறைந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாணவரின் தந்தை முகேஷ் கேசர்வானி போலீசில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:

கடந்த மாதம் 26ம் தேதி, என் மகன் ஷிகர் வழக்கம்போல் கல்லுாரிக்கு சென்றார். அவரை, பாதி வழியில் இருந்து சவும்யா சிங் யாதவ் என்ற தோழி, தன் காரில் கூட்டிச் சென்றார்.

பல்கலை வாகன நிறுத்துமிடத்துக்கு கார் சென்றவுடன், அங்கு மேலும் சில மாணவர்கள் ஏறினர். அப்போது, அதிலிருந்த பெண் உட்பட இரு மாணவர்கள் என் மகன் கன்னத்தில் மாறி மாறி அறைந்தனர். பிற மாணவியரின் பெயரை சொல்லி, அவர்களின் நடத்தை குறித்து பேசுவாயா எனக்கூறி சரமாரியாக அடித்தனர்.

உடன் இருந்த மாணவர்கள் சிலர், அவரை வெளியேற விடாமல் பிடித்துக் கொண்டனர். எவ்வளவோ கெஞ்சியும், என் மகனை வெளியே விடவில்லை. மொத்தம், 45 நிமிடங்களுக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் மன்னிப்பு கேட்டதை அடுத்து, என் மகனை காரில் இருந்து வெளியேற அவர்கள் அனுமதித்தனர்.

இது தொடர்பாக கேட்க சென்ற போது, கல்லுாரி வளாகத்தில் எனக்கும், என் மகனுக்கும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆயுஷ் யாதவ், ஜான்வி மிஸ்ரா, மிலே பானர்ஜி, விவேக் சிங் மற்றும் ஆர்யமான் சுக்லா ஆகிய ஐந்து மாணவர்கள் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தாக்குதலுக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து, அமிட்டி பல்கலை தரப்பும் மவுனம் காக்கும் நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us