குழந்தை திருமணத்துக்கு 2030க்குள் முடிவுரை
குழந்தை திருமணத்துக்கு 2030க்குள் முடிவுரை
குழந்தை திருமணத்துக்கு 2030க்குள் முடிவுரை
ADDED : மார் 20, 2025 10:39 PM
புதுடில்லி:வரும் 2030ம் ஆண்டுக்குள் குழந்தை திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென பல்வேறு மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
குழந்தைத் திருமணம் குறித்து அனைத்து மதத்தின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் மாநாட்டுக்கு இந்திய குழந்தை பாதுகாப்பு என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இந்து மதம், இஸ்லாம், சீக்கியம், கிறிஸ்தவம், பஹாய், பௌத்தம், சமணம், பிரம்ம குமாரி, யூத மதம் மற்றும் ஜோராஸ்ட்ரிய மதங்களை 30க்கும் மேற்பட்ட மத குருமார்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் குழந்தைத் திருமணங்கள் இன்னும் தொடர்வது குறித்து மாநாட்டில் கவலை தெரிவிக்கப்பட்டது. மதங்களை கடந்து தடுக்க வேண்டிய பிரச்னை இது என, அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
ராமகிருஷ்ணா மிஷனின் சுவாமி கிருபாகரனந்தா பேசுகையில், “குழந்தை திருமணத்தை நிறுத்த வேண்டிய ஒரு பழமையான நடைமுறை. பல நுாற்றாண்டுகளாக நீடித்து வரும் இந்த பிரச்னை, கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சமூகங்களுக்கு அறிவைக் கொண்டு அதிகாரம் அளிப்பதன் மூலம் மட்டுமே, தீங்கு விளைவிக்கும் மரபுகளை அகற்றி, ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களுக்கான உரிமை இருப்பதை உறுதி செய்ய முடியும்,” என்றார்.
வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவை குழந்தை திருமணமற்ற நாடாக மாற்றுவதற்கு அனைவரும் பாடுபட வேண்டுமென மாநாட்டில் உறுதி பூண்டனர்.
பரிதாபாத் மறைமாவட்டத்தின் பிஷப் பேராயர் மார் குரியகோஸ் பரணிகுளங்கரா, அகில இந்திய இமாம் அமைப்பின் செயலர் இமாம் பைசான் முனீர் மற்றும் பலர் பங்கேற்றனர்.