கர்நாடகாவில் மின் கட்டணம் யூனிட்டுக்கு 36 பைசா உயர்வு
கர்நாடகாவில் மின் கட்டணம் யூனிட்டுக்கு 36 பைசா உயர்வு
கர்நாடகாவில் மின் கட்டணம் யூனிட்டுக்கு 36 பைசா உயர்வு
ADDED : மார் 21, 2025 12:18 AM

பெங்களூரு: மின் கட்டணத்தை யூனிட்டுக்கு, 36 பைசா உயர்த்தி கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் அரசு 'ஷாக்' கொடுத்து உள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம்; பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை உட்பட ஐந்து வாக்குறுதி திட்டங்களை அரசு அமல்படுத்தி வருகிறது.
இந்த திட்டங்களுக்காக ஆண்டிற்கு 56,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. வாக்குறுதி திட்டங்களுக்கு பணம் கொடுப்பதால், எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல் அரசு திணறுகிறது.
இந்நிலையில், கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், '2025 - 2026ம் ஆண்டிற்கான மின் கட்டணம் 1 யூனிட்டிற்கு 36 பைசா; 2026 - 2027ல் 35 பைசா; 2027 - 2028ல் 34 பைசா உயர்த்தப்படும்' என கூறியிருந்தது.
கர்நாடகாவில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அத்தியாவசிய பொருட்கள் மீதான விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கின்றன.
இவை, மாநில மக்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளன. 'வாக்குறுதி திட்டங்கள் என்ற பெயரில், ஒரு கையால் கொடுத்துவிட்டு இன்னொரு கையால் பணத்தை பறிக்கின்றனர்' என்றும், மக்களிடம் இருந்து குமுறல்கள் கேட்கின்றன.
தற்போது, 1 யூனிட் மின் கட்டணம் 5 ரூபாய் 90 காசாக உள்ளது. யூனிட்டிற்கு 36 பைசா உயர்த்தப்பட்டு இருப்பதன் வாயிலாக, 6 ரூபாய் 26 பைசாவாக உயர்ந்து உள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.