இன்று தேர்தல் வெற்றி கொண்டாட்டம் !
இன்று தேர்தல் வெற்றி கொண்டாட்டம் !
இன்று தேர்தல் வெற்றி கொண்டாட்டம் !
UPDATED : ஜூன் 04, 2024 10:12 AM
ADDED : ஜூன் 03, 2024 11:28 PM

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் வெற்றி கொண்டாட்டம் பகலில் துவங்கும்.
நாடு முழுதும் கடந்த 80 நாட்களாக ஏழு கட்டங்களாக நடந்த லோக்சபா தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாட்டின் 543 தொகுதிகளில், தங்களுடைய எம்.பி.,யாக மக்கள் யாரை தேர்வு செய்துள்ளனர் என்பது இன்று தெரிய வரும்.
விளக்கம்
பா.ஜ.,வினர் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி என்பதில் நம்பிக்கையாக உள்ளனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் இதையே பிரதிபலித்தன. அதே நேரத்தில், 'இவை வெறும் கணிப்புகள் தான்; உண்மை நிலவரம் எங்களுக்கு சாதகமாக இருக்கும்' என, எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணி கூறி வருகிறது.
இந்த கணிப்புகளின் நம்பகத்தன்மையை, இன்று பகல் 12:00 மணிக்கு தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டிவிடும். பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்தால், ஜவஹர்லால் நேருவுக்குப் பின், தன் கட்சியை தொடர்ந்து மூன்று தேர்தலில் வெற்றி பீடத்தில் நிறுத்திய பெருமை பிரதமர் மோடிக்கு கிடைக்கும்.
கடந்த தேர்தல்களில் இல்லாத வகையில், இந்த தேர்தலில் தேர்தல் கமிஷன் மீதும், தேர்தல் நடைமுறைகள் மீதும், எதிர்க்கட்சிகள் அதிகளவு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
அதனால், வழக்கத்துக்கு மாறாக ஓட்டு எண்ணிக்கைக்கு முதல் நாளான நேற்று, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் விளக்கம் அளிக்கும் காட்சியும் நடந்துள்ளது.
விமர்சனம்
வழக்கமாக ஓட்டு எண்ணிக்கைக்குப் பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது தோற்ற கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கும். ஆனால், இந்த முறை, தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன், இந்த விமர்சனங்கள் துவங்கி விட்டன.
ஒவ்வொரு கட்ட ஓட்டுப்பதிவுக்குப் பின், ஓட்டு விபரங்கள் வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து எதிர்க்கட்சிகள் தேர்தல் கமிஷனை குற்றஞ்சாட்டின.
இந்த தேர்தல் தேசிய அளவிலும், மாநில அளவிலும் கட்சிகளின் இருப்பு, செல்வாக்கு, வளர்ச்சியை நிர்ணயிக்கக் கூடியதாக அமைய உள்ளது. தமிழகம், கேரளா போன்ற தென் மாநிலங்களிலும், மேற்கு வங்கம், ஒடிசா போன்ற கிழக்கு மாநிலங்களிலும், பா.ஜ., தன் இருப்பை விரிவுபடுத்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களிலும், பல மாநில சட்டசபை தேர்தல்களிலும் தோல்வி அடைந்த நிலையில், தன் பழைய பெருமையை மீட்டெடுப்பதற்கு முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு இதுதான் பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
வாய்ப்பு
மேற்கு வங்கம், திரிபுரா போன்ற மாநிலங்கள் கையைவிட்டு போயுள்ள நிலையில், கேரளாவில் மட்டுமே கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. தங்கள் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்கு, அந்தக் கட்சிக்கு கிடைத்துள்ள வாய்ப்பாகவும் இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது.
பிஜு ஜனதா தளம், பாரத் ராஷ்ட்ர சமிதி, ஒய்.எஸ்.ஆர்.காங்., பகுஜன் சமாஜ் உட்பட பல மாநில கட்சிகளின் அரசியல் எதிர்காலத்தை இந்த தேர்தல் நிர்ணயிக்கும்.
இந்த தேர்தல், பா.ஜ.,வைச் சேர்ந்த பல மத்திய அமைச்சர்களின் மூத்த தலைவர்கள், முன்னாள் முதல்வர்களின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும். இதில் பலர் முதல் முறையாக மக்களை சந்திக்கின்றனர்.
இதையெல்லாம்விட, நாட்டின் எதிர்காலம் எப்படி செல்லும் என்பதை தங்களுடைய ஓட்டுகளால் மக்கள் தீர்மானித்துஉள்ளனர். நாட்டு மக்களின் ஒட்டுமொத்த மனநிலை, எதிர்பார்ப்பு, நம்பிக்கையை, இந்த தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்க உள்ளன. அதுபோல, உலக நாடுகளும் இந்த தேர்தல் முடிவை எதிர்நோக்கியுள்ளன.