மரணத்திலும் அரசியல்! டில்லி உஷ்ஷ்ஷ்
மரணத்திலும் அரசியல்! டில்லி உஷ்ஷ்ஷ்
மரணத்திலும் அரசியல்! டில்லி உஷ்ஷ்ஷ்

பெங்களூரு: சமீபத்தில், பெங்களூரில் நடந்த ஆர்.சி.பி., கிரிக்கெட் அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்தனர். இது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.
வெற்றிக் கொண்டாட்டத்தை வைத்து, முதல்வர் சித்தராமையாவை இறக்கிவிட்டு, தான் முதல்வராக தற்போதைய துணை முதல்வர் சிவகுமார் திட்டமிட்டாராம்; ஆனால், 11 பேர் இறந்ததால், சிவகுமாரின் நிலைமை பரிதாபமாகிவிட்டது.
இந்த துயர சம்பவத்தை, தனக்கு சாதகமாக பயன்படுத்தி, சிவகுமாரை ஓரங்கட்ட முடிவெடுத்து உள்ளாராம் சித்தராமையா. ஆர்.சி.பி., அணியை விமான நிலையத்தில் சிவகுமார் வரவேற்றது முதல் அனைத்து வீடியோக்களையும் காங்., மேலிடத்திற்கு அனுப்பியதோடு, புகாரும் தெரிவித்துள்ளாராம் சித்தராமையா.
சீனியர் போலீஸ் அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்த தோடு, தன் செயலர் கோவிந்தராஜையும் நீக்கியுள்ளார் முதல்வர் சித்தராமையா. 'வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்த, கோவிந்தராஜ் பல நடவடிக்கைகளை மேற்கொண்டதால், தனக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காக, அவர் மீது சித்தராமையா நடவடிக்கை எடுத்துள்ளார்' என்கின்றனர்.
'இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதல்வராகவும், அதன்பின் தனக்கு முதல்வர் பதவி என, ஒப்பந்தம் உள்ளது; அது மேலிடத்திற்கும் தெரியும். எனவே, நவம்பரில் முதல்வர் பதவி நிச்சயம்' என, காத்திருந்தார் சிவகுமார். தவிர, அதற்காக சித்தராமையாவிற்கு எதிராக செயல்பட்டு வந்த நிலையில், வெற்றி கொண்டாட்டம் சிவகுமாரின் முதல்வர் கனவை சிதைத்துள்ளது.
'போலீஸ் அதிகாரிகளின் முன்னெச்சரிக்கையை மீறி, துணை முதல்வர் செயல்பட்டார் என, பல செய்திகளை சிவகுமாருக்கு எதிராக சித்தராமையா கசிய விடுகிறார்' என புகார் சொல்கின்றனர், சிவகுமாரின் ஆதரவாளர்கள்.