கள்ளக்காதல் விவகாரத்தில் டில்லி நீதிமன்றம் புது விளக்கம்
கள்ளக்காதல் விவகாரத்தில் டில்லி நீதிமன்றம் புது விளக்கம்
கள்ளக்காதல் விவகாரத்தில் டில்லி நீதிமன்றம் புது விளக்கம்
ADDED : மே 25, 2025 01:51 AM

புதுடில்லி: 'திருமண பந்தத்தில், கணவன் மற்றும் மனைவி பரஸ்பரம் நம்பிக்கையுடன் இருப்பதாக ஒப்பந்தம் செய்கின்றனர்; இதில், மனைவியின் கள்ளக்காதலுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது' என, டில்லி நீதிமன்றம் கூறியுள்ளது.
பாதுகாப்பு
ராணுவ மேஜர் ஒருவர், தன் மனைவியின் கள்ளக்காதலை நிரூபிப்பதற்காக, கள்ளக்காதலனான மற்றொரு ராணுவ மேஜருடன் மனைவி சென்ற ஹோட்டலின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதை விசாரித்த டில்லி சிவில் நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளதாவது:
ஹோட்டல்களின் வரவேற்பறை உள்ளிட்ட இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் என்பது, அந்த ஹோட்டலின் பாதுகாப்புக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடு.
இந்த விபரங்களை மூன்றாம் நபர் கேட்க முடியாது. அது போலவே, ஹோட்டலில் முன்பதிவு செய்துள்ள விபரங்களையும் மற்றவர்களுக்கு தர வேண்டிய அவசியம் இல்லை.
இந்த விஷயத்தில் தன் மனைவி, தன் கள்ளக்காதலனுடன் ஹோட்டலுக்கு சென்றுள்ள விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றை தர வேண்டிய கட்டாயம் ஹோட்டலுக்கு இல்லை.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர் கிரஹாம் கிரீனேவின் நாவலில், நம்பகத்தன்மை குறித்து கூறியுள்ளார்.
'திருமண பந்தத்தில் பரஸ்பரம் நம்பிக்கையுடன் இருப்போம் என்று கணவன், மனைவிக்குள் ஒரு ஒப்பந்தம் உள்ளது.அந்த ஒப்பந்தம் முறிந்தால், அதில் இந்த இருவருக்கும் மட்டுமே தொடர்பு உள்ளது; மூன்றாம் நபர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை' என, அதில் அவர் கூறியுள்ளார்.
உத்தரவு
மேலும், இந்த வழக்கில், மனைவி, அவரது கள்ளக்காதலன் பெயர்களை மனுதாரர் குறிப்பிடவில்லை. அவ்வாறு இருக்கும்போது, எந்த வகையில் இந்த வழக்கில் உத்தரவுகள் பிறப்பிக்க முடியும்?
தற்போதைய காலகட்டத்தில் திருமணத்துக்கு மீறிய உறவுகள் குறித்த நம் பார்வை மாறியுள்ளது. அதனால் தான் புதிய கிரிமினல் சட்டத்திலும், இதற்கு முன் இது தொடர்பாக இருந்த சட்டப்பிரிவுகள் சேர்க்கப்படவில்லை.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.