UPDATED : ஜூன் 07, 2024 12:38 PM
ADDED : ஜூன் 07, 2024 11:18 AM

பெங்களூரு : கர்நாடக சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ.,வுக்கு எதிராக பொய்யான விளம்பரம் கொடுத்த வழக்கு தொடர்பாக, அக்கட்சி தொடர்ந்த அவதூறு வழக்கில் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், ஆஜரான காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
கடந்த 2023 சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ., அரசின் மீது '40 சதவீத கமிஷன்' அரசு, 'பேசிஎம்' என, குற்றம் சாட்டி சுவர்களில் காங்கிரசார், அன்றைய முதல்வர் பசவராஜ் பொம்மை படத்துடன் போஸ்டர்கள் ஒட்டினர். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், சித்தராமையா, சிவகுமார் தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ., வை 40 சதவீத கமிஷன் அரசு என, குற்றம் சாட்டினர். இதுமட்டுமின்றி 2023, மே 5ல், நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தனர். இதனால் பா.ஜ., தர்ம சங்கடத்துக்கு ஆளானது. தலைவர்கள் கொதிப்படைந்தனர்.
கட்சி மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி, விளம்பரம் வெளியிட்டது குறித்து, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், கர்நாடக பா.ஜ., முதன்மை செயலர் கேசவ பிரசாத், 2023 மே 8ல் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். மனு தொடர்பாக, விசாரணை நடத்திய நீதிமன்றம், நடப்பாண்டு மார்ச் 11ல் ராகுல், சித்தராமையா, சிவகுமாருக்கு 'சம்மன்' அனுப்பி, விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டது.
லோக்சபா தேர்தல் நடப்பதால், விசாரணைக்கு ஆஜராக முடியாது. ஜூன் வரை கால அவகாசம் அளிக்கும்படி, மூவரும் தங்கள் வக்கீல் மூலம், நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தனர். நீதிமன்றமும் ஜூன் 1ல், ஆஜராகுமாறு உத்தரவிட்டது. சித்தராமையாவும், சிவகுமாரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று கொண்டனர்.
ஆனால், ராகுல் ஆஜராகவில்லை. இன்று(ஜூன் 7) ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டது. இதன்படி, பெங்களூரு ஏசிஏஎம்எம் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர் ஆனார். அவருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.