Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இந்தியாவில் நிற்கும் பிரிட்டீஷ் போர் விமானத்துக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க முடிவு

இந்தியாவில் நிற்கும் பிரிட்டீஷ் போர் விமானத்துக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க முடிவு

இந்தியாவில் நிற்கும் பிரிட்டீஷ் போர் விமானத்துக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க முடிவு

இந்தியாவில் நிற்கும் பிரிட்டீஷ் போர் விமானத்துக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க முடிவு

ADDED : ஜூன் 25, 2025 04:51 PM


Google News
Latest Tamil News
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் போர் விமானத்துக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.பழுது பார்ப்பதற்காக, இங்கிலாந்தில் இருந்து 40 பேர் கொண்ட நிபுணர் குழு விரைவில் வருகின்றனர்.

பிரிட்டன் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்து புறப்பட்ட 'எப் -35' ரக போர் விமானம், கடந்த 14ம் தேதி அரபிக் கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தது. கடற்கொள்ளையர் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் அமைதியின்மையை கருத்தில் கொண்டும், இந்த கண்காணிப்பு பணியை பிரிட்டீஷ் கடற்படை செய்து வருகிறது.

இதற்கென கிளம்பிய போர் விமானம், நீண்ட நேரம் கண்காணிப்பு பணியில் இருந்த காரணத்தால் எரிபொருள் வெகுவாக குறைந்து விட்டது. இருக்கும் எரிபொருளை கொண்டு, மீண்டும் போர் கப்பலுக்கு செல்ல முடியாது என்பதை உணர்ந்த விமானி அருகில் உள்ள விமான நிலையத்தை தேடினார்.

திருவனந்தபுரம் விமான நிலையம் அருகில் இருப்பதை உணர்ந்து மத்திய அரசு அனுமதியுடன் விமானம் அங்கு தரையிறங்கியது. பிரிட்டீஷ் கடற்படை வேண்டுகோள்படி அந்த விமானத்துக்கு எரிபொருளும் வழங்கப்பட்டது. எரிபொருள் நிரப்பிய நிலையில், அந்த விமானத்தை விமானி கிளப்பினார். கிளப்பிய உடனே, விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.

உடனடியாக விமானம் பறக்கும் முடிவை கைவிட்டு, பிரிட்டீஷ் கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பராமரிப்பு குழுவினர் வந்து பழுது நீக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பழுதை சரி செய்ய முடியவில்லை. விமானத்துக்கு, 24 மணி நேரமும், சி.ஐ.எஸ்.எப்., படையினர் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விமானத்திற்கான பார்க்கிங் கட்டணங்களை பிரிட்டிஷ் அதிகாரிகள் செலுத்த வேண்டும் என்பதை விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தத் தொகையை அரசாங்கமே முடிவு செய்யும். தொழில்நுட்ப கோளாறால், கட்டணம் செலுத்தும் நிலை பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

விமானத்தை பழுதுபார்ப்பதற்காக இங்கிலாந்திலிருந்து 40 பேர் கொண்ட நிபுணர் குழு விரைவில் வருகின்றனர் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மும்மரமாக நடந்து வருகிறது.

அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த போர் விமானத்தின் சர்வதேச விலை மதிப்பு 640 கோடி ரூபாய். உலகில் மிகக் குறைந்த நாடுகளிடம் மட்டுமே இந்த விமானம் இருப்பது குறிப்பிடத்தக்கது





      Our Apps Available On




      Dinamalar

      Follow us