ரசாயன தொழிற்சாலை வெடி விபத்து பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு
ரசாயன தொழிற்சாலை வெடி விபத்து பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு
ரசாயன தொழிற்சாலை வெடி விபத்து பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு
ADDED : ஜூலை 02, 2025 06:27 AM

ஹைதராபாத் : தெலுங்கானாவில், ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
தெலுங்கானாவில் சங்கரெட்டி மாவட்டத்தின் பதஞ்சேரு பகுதியில் பாஷ்மிலராம் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு, ஷிகாச்சி நிறுவனத்தின் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இதில், 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது, அங்கிருந்த உலை ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
போராட்டம்
அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் பதறியபடி வெளியேறினர். எனினும், உலையின் அருகே இருந்த தொழிலாளர்கள் பலர் இந்த விபத்தில் சிக்கினர். தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதையடுத்து, உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்க, இரண்டு தீத்தடுப்பு 'ரோபோ'க்களுடன் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுக்கள் ஈடுபட்டன. அப்போது தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 33 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. எனவே, அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதுதவிர, படுகாயங்களுடன் 36 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒன்பது பேரின் அடையாளம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களின் உடலை மரபணு சோதனை வாயிலாக அடையாளம் காண போலீசார் முடிவு செய்துள்ளனர்.
நடவடிக்கை
இந்த வெடி விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஐந்து பேர் அடங்கிய குழுவை மாநில அரசு அமைத்துஉள்ளது.
இக்குழு, விபத்திற்கான காரணம் குறித்து விசாரிப்பதுடன், இதுபோன்ற விபத்துகளை தடுக்க தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், விபத்து நிகழ்ந்த பகுதியில் அமைச்சர்களுடன் முதல்வர் ரேவந்த் ரெட்டி, நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. விபத்தின்போது, 143 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். உயிரிழந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் ஆந்திரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிஷா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
''மாநில அரசு மற்றும் ஷிகாச்சி ரசாயன தொழிற்சாலை நிர்வாகமும் இணைந்து, பலியான தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய், படுகாயம்அடைந்தோருக்கு தலா 10 லட்சம் ரூபாய், லேசான காயமடைந்தோருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கும்.
''காயமடைந்த தொழிலாளர்களின் மருத்துவ செலவை, மாநில அரசே ஏற்கும்,” என்றார்.
இதற்கிடையே, விபத்துக்குள்ளான ஷிகாச்சி ரசாயன தொழிற்சாலையில் தளவாடப் பொருட்கள் கடும் சேதமடைந்துள்ளதால், உற்பத்தி நிலையத்தை 90 நாட்களுக்கு தற்காலிகமாக மூட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.