ADDED : ஜூன் 20, 2024 09:00 AM

'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடகத்தில் பிராமி ஸ்ரீதர் என்ற பெண், 'வீடியோ' ஒன்றை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளதாவது:சமீபத்தில், 'ஆன்லைன்' வாயிலாக மளிகை, காய்கறிப் பொருட்களை வினியோகிக்கும், 'ஸெப்டோ' நிறுவன செயலி வாயிலாக கேக்குடன் சேர்த்து சாப்பிடக்கூடிய, 'ஹெர்ஷேஸ்' நிறுவன, சாக்லேட் சிரப்பை ஆர்டர் செய்து வாங்கினோம்.
அதை ஒரு ஸ்பூனில் ஊற்றி பயன்படுத்திய போது, சில முடிகள் இருப்பதைக் கண்டோம்.எனவே, அதன் மூடியைத் திறந்து சோதனையிட, சாக்லேட் சிரப்பை கப்பில் ஊற்றினோம். அப்போது, உள்ளே இறந்த நிலையில் எலி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். அந்த சாக்லேட் சிரப்பை கேக்குடன் சேர்த்து சாப்பிட்ட எங்கள் குடும்ப உறுப்பினர்கள் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய இதுபோன்ற உணவுப் பொருட்களின் தரத்தை சோதனையிடாமல் அஜாக்கிரதையாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது. எனவே, இதுபோன்ற ஆன்லைன் வாயிலாக வாங்கும் பொருட்களை குழந்தைகள், பெரியோர்களுக்கு அளிக்கும் முன் நன்கு பரிசோதித்து வழங்குங்கள்.இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.பிராமி ஸ்ரீதரின் பதிவு, சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவிய நிலையில், ஹெர்ஷேஸ் சாக்லேட் சிரப் நிறுவனம், மன்னிப்பு கோரியுள்ளது.