Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ புதுச்சேரியில் நெருக்கடி:திணறுகிறது பா.ஜ.,

புதுச்சேரியில் நெருக்கடி:திணறுகிறது பா.ஜ.,

புதுச்சேரியில் நெருக்கடி:திணறுகிறது பா.ஜ.,

புதுச்சேரியில் நெருக்கடி:திணறுகிறது பா.ஜ.,

ADDED : ஜூன் 29, 2025 04:48 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகளுக்கு கடும் நெருக்கடி கொடுத்த பா.ஜ., புதுச்சேரியில் சொந்த கட்சி எம்.எல்.ஏ.,க்களை திருப்திபடுத்த முடியாமல் திணறி வருகிறது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்., -- பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. கூட்டணி அரசில், பா.ஜ.,வை சேர்ந்த செல்வம் சபாநாயகராகவும், நவச்சிவாயம், சாய் சரவணன்குமார் ஆகியோர் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர்.

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் பா.ஜ., தற்போது தங்களுடைய அமைச்சர் சாய் சரவணன்குமார், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோரை ராஜினாமா செய்ய வைத்து, அதிர செய்துள்ளது. இவர்களுக்கு பதில், கட்சி நிர்வாகிகளை புதிய எம்.எல்.ஏ.,க்களாக்க பரிந்துரை செய்துள்ளது. புதுச்சேரி பா.ஜ.,வில் ஏற்பட்டிருக்கும் கோஷ்டி பூசலே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

அதிகார பதவிகளில் இல்லாத பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ.,விற்கு ஆதரவு அளிக்கும் 3 சுயேட்சை எம்.எல்.ஏ.,க்களுக்கு வாரிய தலைவர் பதவி வேண்டும் என, கடந்த 4 ஆண்டுகளாகவே கேட்டு வந்தனர்.

இது தொடர்பாக பா.ஜ., தலைவர்களும் முதல்வர் ரங்சாமியை சந்தித்து, வாரிய தலைவர் பதவியை வழங்கும்படி வலியுறுத்தினர். ஆனால், முதல்வர் யாருக்கும் வாரிய பதவி வழங்கவில்லை.

பா.ஜ., அமைச்சர்களிடம் உள்ள துறைகளில் உள்ள வாரியங்களுக்கு தலைவர் பதவியை நியமித்துக் கொள்ளுங்கள் எனக் கூறி ரங்கசாமி கைவிரித்து விட்டார். ஆனால், பா.ஜ., அமைச்சர்களும், யாருக்கும் வாரியத் தலைவர் பதவி அளிக்கவில்லை. வாரியம் தராத பா.ஜ., அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜ., - எம்.எல்.ஏ., க்களே போர்க்கொடி உயர்த்தினர்.

இதனால், பா.ஜ., அமைச்சர்களிடம் இருந்து பதவியை பறிக்க வேண்டும்; சுழற்சி முறையில் மற்றவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என, பதவி எதிர்பார்த்த பா.ஜ.,வினர் டில்லி வரை சென்று முறையிட்டனர்.

இந்த சூழ்நிலையில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ், புதுச்சேரியில் பா.ஜ.,வில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியல் செய்யத் துவங்கினார்.

கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ஜோஸ் சார்லஸின் பக்கம் சாய்ந்து தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

இதனாலும் கட்சிக்குள் கடும் குழப்பம் ஏற்பட, அனைத்தையும் சீர் செய்யும்விதமாக, அமைச்சரையும் நியமன எம்.எல்.ஏ.,க்களையும் ராஜினாமா செய்ய வைத்து படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது புதுச்சேரி பா.ஜ., தலைமை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us