தேசிய நெடுஞ்சாலையில் விரிசல்; கட்டுமான நிறுவனத்துக்கு தடை
தேசிய நெடுஞ்சாலையில் விரிசல்; கட்டுமான நிறுவனத்துக்கு தடை
தேசிய நெடுஞ்சாலையில் விரிசல்; கட்டுமான நிறுவனத்துக்கு தடை
ADDED : மே 23, 2025 12:57 AM
திருவனந்தபுரம்:கேரளாவில் தென் மேற்கு பருவ மழை இன்னும் ஒரு சில நாட்களில் துவங்க உள்ள நிலையில், புதிதாக கட்டப்பட்டு, முடியும் தருவாயில் உள்ள என்.எச்., 66 எனும் தேசிய நெடுஞ்சாலை 66ல் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து, அந்த சாலையின் கட்டுமான பணியில் ஈடுபட்ட நிறுவனத்துக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தடை விதித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் பன்வல் என்ற இடத்தில் துவங்கும் என்.எச்., 66 சாலை, தமிழகத்தின் கன்னியாகுமரியில் முடிவடைகிறது.
மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் வழியாக போடப்பட்டுள்ள இந்த ஆறு வழிச்சாலை, நாட்டின் மேற்கு பகுதியில் முக்கிய வழித்தடமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளாவின் மலப்புரம், காசர்கோடு, கோழிக்கோடு, திருச்சூர், கொல்லம் ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த மழை உள்ளிட்ட பாதிப்புகளால் நெடுஞ்சாலையில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பருவமழை இன்னும் ஒரு சில நாட்களில் துவங்க உள்ள நிலையில், இந்த சாலையின் பல இடங்களில் சர்வீஸ் சாலைகளில் சேதம் ஏற்பட்டு இடிந்து விழுந்துள்ளன. சில இடங்களில் பாலங்களில் ஏற்பட்டுள்ள விரிசல், பயணியரை அச்சுறுத்துகிறது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த சாலையின் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த கே.என்.ஆர்.கன்ஸ்ட்ரக் ஷன் என்ற நிறுவனத்துக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தடை விதித்துள்ளது.
இதையடுத்து, அந்த நிறுவனம் இனி கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கண்காணிப்பு பணிகளை சரியாக மேற்கொள்ளாத திட்ட மேலாளர் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் சஸ்பெண் செய்யப்பட்டுள்ளனர்.