Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ எம்.எல்.ஏ., சம்பள உயர்வை ஆய்வு செய்ய குழு அமைப்பு

எம்.எல்.ஏ., சம்பள உயர்வை ஆய்வு செய்ய குழு அமைப்பு

எம்.எல்.ஏ., சம்பள உயர்வை ஆய்வு செய்ய குழு அமைப்பு

எம்.எல்.ஏ., சம்பள உயர்வை ஆய்வு செய்ய குழு அமைப்பு

ADDED : மார் 26, 2025 08:36 PM


Google News
புதுடில்லி:டில்லி எம்.எல்.ஏ.,க்களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐந்து பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

டில்லி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர், 24ம் தேதி துவங்கியது. நேற்று முன் தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வரும் 28ம் தேதி வரை சட்டசபை கூட்டத் தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது.

நேற்று நடந்த கூட்டத்தில், தொகுதி தொடர்பான பணிகளுக்கு தங்களுக்கு வழங்கப்படும் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்களுக்கு வழங்கப்படும் 'டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்' மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் சம்பளத்தை உயர்த்தவும் பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.

அனில் ஜா, ஆம் ஆத்மி:


எம்.எல்.ஏ.,க்களுக்கு நெறிமுறையுடன் கண்ணியமான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சம்பளம் மற்றும் சலுகைகள் கலெக்டர் மற்றும் துணை கலெக்டரை விட குறைவாகவே வழங்கப்படுகிறது. அதேபோல, முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு, ஓய்வூதியத் தொகையை அதிகரிக்க வேண்டும்.

குல்வந்த் ராணா, பா.ஜ.,


கோவா, ஜம்மு - -காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களைப் போல டில்லி எம்.எல்.ஏ.,க்களுக்கும் மரியாதைக்குரிய சம்பளம் வழங்க வேண்டும்.

சூர்யபிரகாஷ் காத்ரி, ஆம் ஆத்மி:


எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்படும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் எண்ணிக்கையை இரண்டில் இருந்து நான்காக உயர்த்த வேண்டும். அதேபோல, குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ், அவர்களின் ஊதியத்தையும் அதிகரிக்க வேண்டும்.

சபாநாயகர் விஜேந்தர் குப்தா:

செலவுப் பணவீக்க குறியீடு அடிப்படையில் 2024ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் எம்.பி.,க்களின் சம்பளம் 24 சதவீதம் உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், டில்லி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் சம்பளத்தை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து, பா.ஜ., தலைமைக் கொறடா அபய் வர்மா தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் சூர்ய பிரகாஷ் காத்ரி, பூனம் சர்மா, சஜீவ் ஜா மற்றும் விசேஷ் ரவி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

டில்லி எம்.எல்.ஏ.,க்களுக்கு 54,000 ரூபாயாக இருந்த சம்பளம் 90,000 ரூபாயாகவும், சபாநாயகர், துணை சபாநாயகர், முதல்வர், அமைச்சர், தலைமைக் கொறடா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் சம்பளம் 72,000 ரூபாயில் இருந்து 1.7 லட்சம் ரூபாயாகவும், 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயர்த்தப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us