மும்பையில் விளம்பர பலகை வைக்க கமிஷனர் மனைவிக்கு ரூ.46 லட்சம் லஞ்சம்
மும்பையில் விளம்பர பலகை வைக்க கமிஷனர் மனைவிக்கு ரூ.46 லட்சம் லஞ்சம்
மும்பையில் விளம்பர பலகை வைக்க கமிஷனர் மனைவிக்கு ரூ.46 லட்சம் லஞ்சம்
ADDED : ஜூன் 24, 2024 05:08 AM

மும்பை: ''மஹாராஷ்டிராவில் 14 பேர் பலியாக காரணமாக இருந்த விளம்பர பலகையை வைக்க அனுமதி அளித்த போலீஷ் கமிஷனரின் மனைவிக்கு, அந்த விளம்பர நிறுவனம், 46 லட்சம் ரூபாய் லஞ்சம் அளித்துள்ளது,'' என அம்மாநில பா.ஜ., முன்னாள் எம்.பி., கிரித் சோமையா குற்றஞ்சாட்டியுள்ளார்.
14 பேர் பலி
மஹாராஷ்டிராவின் மும்பையில் கடந்த மாதம் பயங்கரமான புழுதிப் புயல் வீசியது. கனமழையுடன் 60 கி.மீ., வேகத்தில் வீசிய காற்றில், கட்கோபர் பகுதி யில் 120 அடி உயரம், 120 அடி நீளத்தில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட விளம்பர பலகை சரிந்து, அருகில் இருந்த பெட்ரோல் பங்க் மீது விழுந்தது.
இதில், பெட்ரோல் பங்கிற்கு வந்தவர்கள், அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள், பாதசாரிகள் உட்பட பலர் விளம்பர பலகையின் அடியில் சிக்கினர். இந்த விபத்தில் 14 பேர் பலியாகினர்; 75க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதையடுத்து, விதிகளை மீறி விளம்பர பலகை வைத்திருந்த ஈகோ மீடியா நிறுவன உரிமையாளர் பாவேஷ் பிண்டே உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், விளம்பர பலகை வைக்க அனுமதி அளித்த ஜி.ஆர்.பி., எனப்படும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே போலீசாரின் அப்போதைய கமிஷனர் குவைசர் காலித்தின் மனைவிக்கு சொந்தமான நிறுவனத்துக்கு, பாவேஷ் 46 லட்சம் ரூபாய் லஞ்சம் அளித்துள்ளதாக பா.ஜ., முன்னாள் எம்.பி., கிரித் சோமையா குற்றஞ்சாட்டியுள்ளார்.
5 கோடி ரூபாய்
இது தொடர்பாக தன் சமூக வலைதள பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது: விபத்து நடந்த விளம்பர பலகை வைத்திருந்த இடம் ரயில்வேக்கு சொந்தமானது. அந்த விளம்பர பலகை வைத்திருந்த ஈகோ மீடியா நிறுவனம், கட்கோபர் மற்றும் தாதர் பகுதிகளில் 12க்கும் மேற்பட்ட விளம்பர பலகைகளை சட்டவிரோதமாக வைக்க ரயில்வே போலீசார் மற்றும் மும்பை மாநகராட்சி அதிகாரிகளுக்கு 5 கோடி ரூபாய் வரை தந்துள்ளது.
அது மட்டுமின்றி கட்கோபர் பகுதியில் விளம்பர பலகை வைக்க அனுமதி அளித்த அப்போதைய ரயில்வே கமிஷனர் குவைசர் காலித்தின் மனைவி சும்மானாவின் கார்மென்ட் நிறுவனத்துக்கு, பாவேஷ் 46 லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்கியுள்ளது, வங்கி பரிவர்த்தனைகள் வாயிலாக தெரிய வந்துள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.