முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு மைசூரில் 14 வீட்டு மனைகள்
முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு மைசூரில் 14 வீட்டு மனைகள்
முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு மைசூரில் 14 வீட்டு மனைகள்
ADDED : ஜூலை 27, 2024 02:22 AM

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு, மைசூரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கிய விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, பா.ஜ., - எம்.பி.,க்கள் பார்லிமென்ட் வளாகத்தில் நேற்று தர்ணா நடத்தினர். ஆனால், ''எந்த முறைகேடும் நடக்கவில்லை;
சட்டப்படியே மனைகளை வாங்கினோம்,'' என சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 'மூடா' எனும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வரின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன.
இவற்றில் முறைகேடு நடந்துள்ளதாக பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த விஷயம் பகிரங்கமானதும், வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் அதிரடியாக 'சஸ்பெண்ட்'செய்யப்பட்டனர்.
அனுமதி மறுப்பு
மைசூரு கலெக்டர் ராஜேந்திரா துாக்கியடிக்கப்பட்டு, லட்சுமிகாந்த் ரெட்டி நியமனம் செய்யப்பட்டார். முறைகேட்டை கண்டித்து, மைசூரு, பெங்களூரில் பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதுகுறித்து சட்டசபையில் விவாதிக்க பா.ஜ., அனுமதி கோரியும், சபாநாயகர் காதர் நிராகரித்து விட்டார்.
இதனால், இரண்டு நாட்கள் சட்டசபை முடங்கியது. தொடர்ந்து, முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், பா.ஜ., - ம.ஜ.த.,வினர் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.
இந்நிலையில், டில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில், கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து, அம்மாநில பா.ஜ.,வைச் சேர்ந்த ராஜ்யசபா, லோக்சபா எம்.பி.,க்கள் நேற்று தர்ணா நடத்தினர்.அப்போது, முதல்வரின் மனைவிக்கு மைசூரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கியது ஏன் என கேள்வி எழுப்பியதுடன், முதல்வரை கண்டித்தும், எதிர்ப்பு பதாகைகள் ஏந்தியும் கோஷமிட்டனர்.
சபையின் மற்ற அலுவல்களை ஒத்தி வைத்துவிட்டு, கர்நாடகா ஊழல் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என, ராஜ்யசபாவில் பா.ஜ., சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால், சபை தலைவர் ஜக்தீப் தன்கர் இதற்கு அனுமதி மறுத்தார்.
அதேநேரத்தில், பூஜ்ய நேரத்தில் இதுகுறித்து பேசுவதற்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த இரன்னா கடாடிக்கு, சபை தலைவர் அனுமதி அளித்தார்.ஆவணங்கள் வெளியீடு
இதற்கு, காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பதிலடியாக பா.ஜ., உறுப்பினர்களும் குரல் எழுப்பினர்.இதனால் சபையில் சிறிது நேரம் அமளி நிலவியது.
இதற்கிடையில், மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமியும், மூடாவால்
ஆக்கிரமிக்கப்பட்ட தன் நிலத்துக்கு பதிலாக
மாற்று நிலம் வழங்கும்படி விண்ணப்பித்து
உள்ளதற்கான ஆவணங்களை, கர்நாடக நகர வளர்ச்சி துறை அமைச்சர் பைரதி சுரேஷ்
நேற்று வெளியிட்டார்.