Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ உத்தராகண்டில் மேக வெடிப்பு இருவர் பலி; 7 பேர் மாயம்

உத்தராகண்டில் மேக வெடிப்பு இருவர் பலி; 7 பேர் மாயம்

உத்தராகண்டில் மேக வெடிப்பு இருவர் பலி; 7 பேர் மாயம்

உத்தராகண்டில் மேக வெடிப்பு இருவர் பலி; 7 பேர் மாயம்

ADDED : ஜூன் 30, 2025 01:36 AM


Google News
உத்தரகாசி: உத்தராகண்டில், மேக வெடிப்பு காரணமாக பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, இரண்டு தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். மாயமான ஏழு பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

உத்தராகண்டில் உத்தரகாசி மாவட்டத்தின் பாலிகட் என்ற பகுதியில், நம் அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தற்காலிக கூடாரம் அமைத்து கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று, உத்தரகாசி மாவட்டத்தில் திடீரென மேக வெடிப்பு காரணமாக பலத்த மழை கொட்டியது. அப்போது, பாலிகட் பகுதியில் உள்ள சிலாய் வளைவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், நேபாள தொழிலாளர்கள் தங்கியிருந்த கூடாரம் அடித்துச் செல்லப்பட்டது. 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், ஒன்பது பேர் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதில் இருவரது உடல்கள், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து 18 கி.மீ., தொலைவில் உள்ள திலாடி ஷாஹீத் ஸ்மாரக் அருகே யமுனை நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்டன. மாயமான ஏழு பேரை தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

ஹிமாச்சலில் பாதிப்பு


ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன; இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. சுற்றுலா பயணியர் பலர், நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேபோல், சிம்லா - கல்கா இடையே ரயில் பாதை நடுவே பாறைகள் உருண்டு விழுந்ததால், ரயில் போக்குவரத்து தடைப்பட்டது.

இதனால், அவ்வழித்தடத்தில் இயக்கப்பட்ட ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடுவழியில் நிறுத்தப்பட்டதால், பயணியர் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இதேபோல் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால், அங்கு வசித்த மக்களை மீட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தீவிரமானது பருவமழை

இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியங்களில், ஜூலை 8ல் தென்மேற்கு பருவமழை வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒன்பது நாட்களுக்கு முன்னதாக, நேற்றே பருவமழை துவங்கியது.மேலும், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பருவமழை துவங்கி உள்ளது. முன்கூட்டியே பருவமழை துவங்குவது, விவசாயம் மற்றும் நீராதாரத்துக்கு உதவியாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us