Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பாக்.,கிற்கு, 'ஜே - 35' விமானம் வழங்கும் சீனா; 'ஸ்டெல்த்' ரக தயாரிப்பை வேகப்படுத்துமா இந்தியா?

பாக்.,கிற்கு, 'ஜே - 35' விமானம் வழங்கும் சீனா; 'ஸ்டெல்த்' ரக தயாரிப்பை வேகப்படுத்துமா இந்தியா?

பாக்.,கிற்கு, 'ஜே - 35' விமானம் வழங்கும் சீனா; 'ஸ்டெல்த்' ரக தயாரிப்பை வேகப்படுத்துமா இந்தியா?

பாக்.,கிற்கு, 'ஜே - 35' விமானம் வழங்கும் சீனா; 'ஸ்டெல்த்' ரக தயாரிப்பை வேகப்படுத்துமா இந்தியா?

ADDED : ஜூன் 22, 2025 12:27 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: அதிநவீன, 'ஜே - 10' போர் விமானத்தை பாகிஸ்தானுக்கு ஏற்கனவே வழங்கியுள்ள சீனா, 'ரேடார்' கண்காணிப்பில் சிக்காத, 'ஸ்டெல்த்' தொழில்நுட்பம் உடைய, 'ஷென்யாங் ஜே - 35' ரகத்தை சேர்ந்த, 40 போர் விமானங்களை வழங்க முன்வந்துள்ளது. 'இந்த, 'ஸ்டெல்த்' தொழில்நுட்பத்துடன் கூடிய, 5ம் தலைமுறை போர் விமானங்கள் நம்மிடம் இல்லாத சூழலில், அவற்றை விரைவில் வாங்குவது இந்திய படைக்கு கூடுதல் பலம் சேர்க்கும்' என, வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தான் உடனான நம் உறவில், பல ஆண்டுகளாகவே விரிசல் உள்ளது. சமீபத்திய பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், பாக்., மீது குண்டுமழை பொழிந்து அந்நாட்டு ராணுவத்தை நம் படையினர் திக்குமுக்காடச் செய்தனர்.

நம் மீது உள்ள பகையால் பாகிஸ்தானுக்கு நட்புக்கரம் நீட்டி வரும் சீனா, சமீபத்திய சண்டையின் போதும், பாக்.,கிற்கு ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்களை சப்ளை செய்தது.

இதன் தொடர்ச்சியாக, 5ம் தலைமுறை, 'ஷென்யாங் ஜே - 35' என்ற, 40 அதிநவீன போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்க சீனா முடிவு செய்துள்ளது. இது, 'ஸ்டெல்த்' தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட போர் விமானம்.

பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் குவாஜா ஆசிப், சமீபத்தில் சீனா சென்று வந்தார். அதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஒப்புதல்


வழங்கப்பட உள்ள, 40 விமானங்களில், 30 விமானங்கள் ஆகஸ்ட் மாதத்திற்குள் பாகிஸ்தான் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 50 சதவீத தள்ளுபடி மற்றும் எளிதான தவணை விருப்பங்களை வழங்கவும் சீனா முன்வந்துள்ளது.

இந்த விமானங்கள் கிடைத்தால், 'ஸ்டெல்த்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் பாகிஸ்தான் இணையும். தற்சமயம் நம் நாட்டில், 'ஸ்டெல்த்' தொழில்நுட்பத்துடன் கூடிய போர் விமானங்கள் இல்லை.

இந்த தொழில்நுட்பத்துடன் கூடிய ஏ.எம்.சி.ஏ., எனப்படும், மேம்பட்ட நடுத்தர போர் விமானத்தை உள்நாட்டிலேயே தயாரிக்க நம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தாலும், அது உருவாக்கப்பட்டு நம் விமானப்படையில் சேர்க்க குறைந்தது, 10 ஆண்டுகளாவது ஆகும்.

கிட்டத்தட்ட, 2035ல் தான் இந்த ஏ.எம்.சி.ஏ., விமானங்கள் நம் விமானப்படையில் சேர்க்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நம் விமானப்படையின் முன்னாள் போர் விமானியும், பாதுகாப்பு ஆய்வுக்குழு கேப்டனுமான அஜய் அஹ்லாவத் கூறியதாவது:

பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானிகள் குழு, ஆறு மாதங்களுக்கு மேலாக சீனாவில் தங்கி, 'ஷென்யாங் ஜே - 35' ரக போர் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகளை பெற்று வருகின்றனர். முழுமையான பயிற்சிக்கு பின்னரே, 'ஜே - 35' ரக விமானங்களை விமானப்படையில் சேர்க்க பாக்., திட்டமிட்டுள்ளது.

சீனாவின் இந்த, 'ஜே - 35' போர் விமானங்களை, பிற நாடுகளுக்கு, 'எப்.சி., - 31' என்ற பெயரில் சீனா ஏற்றுமதி செய்து வருகிறது.

இது, 'ஜே - 35'யை விட சற்றே திறன் குறைவானது. முழு திறன் உடைய விமானங்களை சீனா யாருக்கும் தருவதில்லை. பாக்., உட்பட.

எப்போதுமே பாக்.,கை விட நம் விமானப்படை ஒரு படி மேலேதான் இருந்துள்ளது. இரு தரப்பு மோதலின்போது, நம் விமானப்படையே அதிக ஆதிக்கம் செலுத்தும். இந்த, 'ஜே - 35' விமானங்களின் வருகை, அந்த ஆதிக்கத்தை குறைக்கும் அபாயம் உள்ளது.

நல்ல தீர்வு


'ஸ்டெல்த்' தொழில்நுட்பத்துடன் கூடிய ஏ.எம்.சி.ஏ., விமானங்களை உள்நாட்டிலேயே நாம் தயாரிப்பது நல்ல தீர்வுதான் என்றாலும், அதற்கு இன்னும், 10 ஆண்டுகள் ஆகும் என்பது சிக்கலான ஒன்று.

ஆகையால், இந்த திட்டத்தை தேசியளவில் முன்னிறுத்தி, அவற்றை விரைவில் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு இறங்க வேண்டும் என்பதே இதற்கான தீர்வு. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விவகாரம், நம் பாதுகாப்பு படையின் பலம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள நிலையில், நிலைமையை சமாளிக்க உரிய நடவடிக்கை களை எடுக்கும் பணியை ராணுவ அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் உள்ளிட்ட பிற அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானப்படைக்கு கவலை ஏன்?

ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை பாகிஸ்தான் பெறுவதால், நிச்சயம் நம் நாட்டின் விமான பலத்தை ஒப்பிடுகையில், அந்நாட்டு பலம் கூடும். போர் சமயத்தில், 'ஜே - 35' ரக போர் விமானங்களை இயக்கும்போது, அவை நம் நாட்டு ரேடாரில் வராமல் இலக்குகளை தாக்கும் திறன் கொண்டதால், நமக்கான ஆபத்து அதிகமாகும். அதேசமயம், தரையில் இருந்தபடி வானில் உள்ள இலக்குகளை துல்லி யமாக தாக்கும் திறன் உடையது. ஆயுதங்களை எடுத்துச்சென்று பிற விமானங்களுக்கு உதவவும், இந்த போர் விமானங்களால் முடியும். இதுபோன்ற திறன்களை உடைய, 'ஜே - 35' ரக போர் விமானம் நமக்கு நிச்சயம் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என நம்பப்படுகிறது. சீனாவும், பாகிஸ்தானும், 'ஸ்டெல்த்' போர் விமானங்களை இயக்குவதால், பலமுனைப் போர்கள் ஏற்பட்டால் இந்தியாவின் வான் பாதுகாப்பு கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடும்.



'ஸ்டெல்த்' என்றால் என்ன?

'ஸ்டெல்த்' என்ற ஆங்கிலச்சொல்லுக்கு 'ரகசிய' என்று அர்த்தம். எதிரிகளே அறியாத வகையில் அவர்களின் ரேடார்களுக்குள் சிக்காமல் எதிரி நாட்டிற்குள் ஊடுருவும் திறன் உடைய ஏவுகணை அல்லது போர் விமானங்களை, 'ஸ்டெல்த்' எனக் குறிப்பிடுவது வழக்கம். ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களின் முக்கிய அம்சம்தான் இந்த, 'ஸ்டெல்த்' தொழில்நுட்பம். இது விமானத்தின் ரேடார் குறுக்குவெட்டு மற்றும் அகச்சிவப்பு வெப்ப கண்டறிதலைக் குறைக்கிறது, இதனால், விமானத்தின் இருப்பை ரேடாரால் கண்டறிவது மிகவும் கடினம். இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே ஐந்தாம் தலைமுறை, 'ஸ்டெல்த்' போர் விமானங்களை உருவாக்கியுள்ளன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us