வீடுகளில் சோலார் பேனல் நிறுவ ரூ.30,000 மானியம் முதல்வர் ரேகா குப்தா தகவல்
வீடுகளில் சோலார் பேனல் நிறுவ ரூ.30,000 மானியம் முதல்வர் ரேகா குப்தா தகவல்
வீடுகளில் சோலார் பேனல் நிறுவ ரூ.30,000 மானியம் முதல்வர் ரேகா குப்தா தகவல்
ADDED : மே 21, 2025 10:03 PM

புதுடில்லி:மாநகர் முழுதும் சாலைகளில் மாசுபாட்டைக் குறைக்க, பொதுப்பணித் துறையின் விரிவான சுகாதாரம் மற்றும் துாசி கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முதல்வர் ரேகா குப்தா தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. கூட்டத்துக்குப் பின், நிருபர்களிடம் முதல்வர் ரேகா கூறியதாவது:
டில்லி மாநகர் முழுதும் சாலைகளில் மாசுபாட்டைக் குறைக்க அதிநவீன துப்புரவு இயந்திரங்களை வாங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பொதுப்பணித்துறை பராமரிக்கும் சாலைகளில் மாசை கட்டுப்படுத்த நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்படும்.
புகை எதிர்ப்பு துப்பாக்கிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட 250 நீர் தெளிப்பான் இயந்திரங்கள் மற்றும் 210 நீர் தெளிப்பான் இயந்திரங்கள் மற்றும் புகை எதிர்ப்பு துப்பாக்கிகள் அடங்கும்.
மேலும், 70 சாலை துப்புரவு இயந்திரங்கள், 18 டம்ப் வாகனங்கள் மற்றும் 18 தண்ணீர் டேங்கர்களும் வாங்கப்படும்.
இந்த அதிநவீன இயந்திரங்கள் குளிர்காலம் துவங்குவதற்கு முன்ஒஏ டில்லி சாலைகளில் முழுமையாக பயன்படுத்தப்படும்.
இந்த அதிநவீன இயந்திரங்கள் வாங்க சுற்றுச்சூழல் துறை 'மாசு கட்டுப்பாடு மற்றும் அவசர நடவடிக்கைகள்' திட்டத்தின் கீழ், பொதுப்பணித் துறைக்குத் தேவையான நிதியை வழங்கும்.
இந்த அதிநவீன இயந்திரங்கள் சாலைகளில் உள்ள துாசியை சுத்தம் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். மேலும், ஒட்டுமொத்த காற்றின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தேவைக்கேற்ப மாநகர் முழுதும் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
பெயர் மாற்றம்
கல்வித் துறையில், 'சிறந்த மாணவர்களுக்கான முதல்வர் உதவித்தொகை' என்பதை 'சிறந்த மாணவர்களுக்கான லால் பகதுார் சாஸ்திரி உதவித்தொகை' என பயர் மாற்றம் செய்ய கல்வி இயக்குனரகம் செய்திருந்த பரிந்துரைக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஏற்கனவே, 'சிறந்த மாணவர்களுக்கான லால் பகதுார் சாஸ்திரி உதவித்தொகை' என்ற பெயரில் இருந்த திட்டம் முந்தைய அரசாங்கத்தால் 2019 - 2020ம் ஆண்டில் பெயர் மாற்றப்பட்டது. தற்போது, பழைய பெயரிலேயே மீண்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்த திட்டத்தின் கீழ், 80 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரையிலான மாணவர்களுக்கு ஆண்டுக்கு, 2,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மானியம்
வீடுகளில், மூன்று கிலோ வாட் சூரிய மின்சக்தி பேனல் நிறுவ 30,000 ரூபாய் மானியம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் சூர்யா கர் என்ற திட்டத்தின் வாயிலாக மக்கள் மாதந்தோறும் 4,200 ரூபாய் சேமிக்கலாம். இந்த திட்டம் தூய்மையான மற்றும் பசுமையான டில்லியை உருவாக்கும்.
இந்த திட்டத்துக்காக 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், 2.3 லட்சம் வீடுகளில் சூரிய சக்தி பேனல் அமைப்பதே அரசின் நோக்கம்.
மூன்று கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி பேனல் நிறுவ 90,000 ரூபாய் வரை செலவாகிறது. அதற்கு கடன் வசதி வழங்கவும் நிதி நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.