பயங்கரவாதி கசாப் பெயரில் ஒரு இமெயில்; சத்தீஸ்கர் ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பயங்கரவாதி கசாப் பெயரில் ஒரு இமெயில்; சத்தீஸ்கர் ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பயங்கரவாதி கசாப் பெயரில் ஒரு இமெயில்; சத்தீஸ்கர் ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஜூன் 10, 2025 05:58 PM

பிலாஸ்பூர்; சத்தீஸ்கர் ஐகோர்ட்டில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த இ மெயிலால் பீதியடைந்த நீதிபதிகள், வக்கீல்கள், ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநில ஐகோர்ட்டானது பிலாஸ்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. ஐகோர்ட்டின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் வந்துள்ளது. அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் வெடித்துவிடும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மிரட்டல் மெட்ராஸ் டைகர்ஸ் பார் அஜ்மல் கசாப் (Madras Tigers for Ajmal Kasab) என்ற பெயரில் abdul abdia@outlook.com என்ற இ மெயில் முகவரியில் இருந்து அனுப்பப்பட்டு இருந்தது. பயங்கரவாதி அஜ்மல் கசாப், 2008ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தொடர் தாக்குதலில் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டவன்.
இதுகுறித்து உடனடியாக மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர்.
கோர்ட்டில் இருந்த வக்கீல்கள், நீதிபதிகள், கோர்ட் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் நிபுணர்கள் குழுவினர் சோதனை நடத்தினர். பல மணி நேரம் நீடித்த சோதனையில் எவ்வித வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதையடுத்து மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட மூத்த எஸ்.பி., ரஜ்னீஷ் சிங் கூறியதாவது;
எங்களின் முதல்கட்ட விசாரணையின் முடிவில் எந்த வெடிபொருட்களும் கைப்பற்றப்படவில்லை. இருப்பினும் மிகுந்த கவனத்துடன் கையாண்டு வருகிறோம். இமெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது, யார் அனுப்பி இருப்பார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.