நண்பர் மனைவியுடன் கள்ளக்காதல்: வாலிபரை கொன்று எரித்த மூவர் கைது
நண்பர் மனைவியுடன் கள்ளக்காதல்: வாலிபரை கொன்று எரித்த மூவர் கைது
நண்பர் மனைவியுடன் கள்ளக்காதல்: வாலிபரை கொன்று எரித்த மூவர் கைது
ADDED : ஜூன் 11, 2024 06:08 PM

பீதர்: வாலிபர் உடல் எலும்புகூடாக மீட்கப்பட்ட வழக்கில், நண்பர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதல் விவகாரத்தில், கொன்று எரித்தது தெரிந்தது.
பீதர் ஹும்னாபாத் சக்காரஞ்ச் வாடி கிராமத்தின் சிவாஜி பாபுராவ் அல்லுார், 30; திருமணம் ஆகவில்லை. துபாயில் வேலை செய்தார். விடுமுறை எடுத்து கொண்டு, கடந்த ஏப்ரல் 26ம் தேதி சொந்த ஊருக்கு வந்தார். கடந்த மாதம் 3ம் தேதியில் இருந்து, திடீரென மாயமானார்.
அவரை குடும்பத்தினர் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஹல்லாகேட் போலீசில், தாய் ருக்மணி புகார் செய்தார். கடந்த மாதம் 12ம் தேதி, சக்காரஞ்ச் வாடி கிராமத்தின் வெளிபுற பகுதியில், ரயில்வே மேம்பாலத்தின் கீழ், ஒருவரின் உடல் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
வெளிநாட்டு பணம்
உடல் அருகே ஒரு பையில், வெளிநாட்டு பணம் இருந்தது. அந்த நபரின் உடை, வெளிநாட்டு பணத்தை வைத்து விசாரித்த போது, மாயமான சிவாஜி என்பது தெரிந்தது. அவரை யாரோ கொன்று, உடலை எரித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் சிவாஜியை கொன்றதாக, அவரது நண்பர் பசவராஜ் வாகேனுார், 30 என்பவர், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. சிவாஜியும், பசவராஜும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். நண்பர் வீட்டிற்கு சிவாஜி அடிக்கடி சென்றார். அப்போது அவருக்கும், பசவராஜ் மனைவிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.
வீடியோ கால்
துபாய் சென்ற பின்னரும், கள்ளக்காதல் நீடித்து உள்ளது. இருவரும் தினமும் வீடியோ காலில் பேசி உள்ளனர். மனைவிக்கு யாருடனோ கள்ளக்காதல் இருப்பது, பசவராஜுக்கு தெரிந்தது. ஆனால் அந்த நபர், சிவாஜி தான் என்பது தெரியவில்லை. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சிவாஜி ஊருக்கு வந்த போது, பசவராஜ் மனைவியுடன் வீடியோ காலில் பேசி உள்ளார். இதை பசவராஜ் பார்த்து விட்டார்.
இதுகுறித்து கேட்ட போது, அவர் சரியாக பதில் சொல்லவில்லை. கோபம் அடைந்த பசவராஜ், கடந்த மே 3ம் தேதி சிவாஜியை, மது அருந்த அழைத்து சென்றார். அங்கு தனது நண்பர்களான ஹரிஷ், சித்தரோட சாமி ஆகியோரை வரவழைத்தார். மூன்று பேரும் சேர்ந்து சிவாஜியை, இரும்பு கம்பியால் அடித்து கொன்று, உடலை எரித்தது தெரிந்தது. பசவராஜ் கொடுத்த தகவலின்படி ஹரிஷ், சித்தரோட சாமியும் கைது செய்யப்பட்டனர்.