Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மனமாற்றம்! நாடு முழுதும் அடுத்தடுத்து சரணடையும் நக்சல்கள்: மத்திய அரசின் முயற்சிக்கு மாபெரும் வெற்றி

மனமாற்றம்! நாடு முழுதும் அடுத்தடுத்து சரணடையும் நக்சல்கள்: மத்திய அரசின் முயற்சிக்கு மாபெரும் வெற்றி

மனமாற்றம்! நாடு முழுதும் அடுத்தடுத்து சரணடையும் நக்சல்கள்: மத்திய அரசின் முயற்சிக்கு மாபெரும் வெற்றி

மனமாற்றம்! நாடு முழுதும் அடுத்தடுத்து சரணடையும் நக்சல்கள்: மத்திய அரசின் முயற்சிக்கு மாபெரும் வெற்றி

ADDED : அக் 19, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
கரியாபந்த்: நம் பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பயந்து, நாடு முழுதும் நக்சல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சரணடைந்து வருவது அதிகரித்துள்ளது. நக்சல்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மனமாற்றம், மத்திய அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது. மஹாராஷ்டிராவில் சமீபத்தில் சரணடைந்த நக்சல் முக்கிய தளபதி வேணுகோபால் ராவ், வன்முறையை கைவிட்டு போலீசில் சரணடையும்படி நக்சல்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். சத்தீஸ்கர், ஒடிஷா, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில், நக்சல்களின் ஆதிக்கம் உள்ளது. இந்த மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளில் பதுங்கி, நாசவேலைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 2026 மார்ச் 31ம் தேதிக்குள், நாட்டில் இருந்து நக்சல்களை முற்றிலுமாக ஒழிக்க மத்திய பா.ஜ., அரசு உறுதி பூண்டுள்ளது.

இந்த இலக்கை அடையும் நோக்கில், மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய ஆயுதப்படையினர் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நம் பாதுகாப்பு படையினரின் கூட்டு நடவடிக்கைகளால், நக்சல் பிடியில் இருந்த கிராமங்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு வருகின்றன. நக்சல்கள் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளன.

அதிரடி நடவடிக்கை நம் பாதுகாப்பு படையினரின் இடைவிடாத அதிரடி நடவடிக்கைகளுக்கு பயந்து, நக்சல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நாடு முழுதும் சரணடைந்து வருவது, கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில், நக்சல் முக்கிய தளபதி வேணுகோபால் ராவ், தன் ஆதரவாளர்கள் 60 பேருடன் கடந்த 16ல், போலீசாரிடம் சரணடைந்தார்.

நக்சல்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்ட அவரது தலைக்கு மட்டும், 6 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 17ல், சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில், நக்சல் மூத்த தலைவர் ரூபேஷ், ஆதரவாளர்கள் 210 பேருடன் சரணடைந்தார். இது தவிர, சுக்மா மாவட்டத்தில், 28 நக்சல்கள் சரணடைந்தனர்.

சரணடைந்த நக்சல்கள், தங்களது ஆயுதங்களையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும், 300க்கும் மேற்பட்ட நக்சல்கள் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மனமாற்றம், மத்திய அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.

அமைதி வாழ்க்கை இந்நிலையில், மஹாராஷ்டிராவில் சரணடைந்த நக்சல் முக்கிய தளபதி வேணுகோபால் ராவ், வன்முறையை கைவிட்டு அமைதி வாழ்க்கைக்கு திரும்பும்படியும், தேசிய பாதுகாப்புக்கான பொது நீரோட்டத்தில் இணையும்படியும், நக்சல்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது ஒப்புதலுடன், உதாந்தி பகுதி குழுவின் நக்சல் தலைவர் சுனில், ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். சத்தீஸ்கர் - -ஒடிஷா எல்லையில் உள்ள கரியாபந்த் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இந்த குழு செயல்பட்டு வருகிறது.

கடிதத்தில் கூறப் பட்டுள்ளதாவது:

பாதுகாப்பு படையினரின் அழுத்தம் மற்றும் தற்போதைய சூழ்நிலையில், ஆயுத பிரசாரம் இனி சாத்தியமில்லை என்பதை வேணுகோபால் ராவ் ஒப்புக்கொண்டுள்ளார். நக்சல் அமைப்பில் குறைபாடு இருப்பதாகவும், நம் போராட்டத்திறன் பலவீனமடைந்து விட்டதாகவும், பல வாய்ப்புகளை தவறவிட்டதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

வன்முறையை கைவிட்டு, ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு போலீசாரிடம் சரணடையும்படி அவர் வலியுறுத்தி உள்ளார். வேணுகோபால் ராவ், ரூபேஷ் ஆகியோரின் முடிவுக்கு உதாந்தி பகுதி குழு ஆதரவு அளிக்கிறது.

கோப்ரா, சினாபாலி, சோனாபேடா - -தரம்பந்தா- - கோலிபாதர் மற்றும் சீதநாதி பகுதிகளில் உள்ள பிரிவுகளும் இதை பின்பற்ற வேண்டும். நாம் ஏற்கனவே முக்கியமான நபர்களை இழந்து விட்டோம். எனவே, போலீசில் சரணடைந்து அமைதியான இயக்கங்கள் மூலம் மக்களின் பிரச்னைகளை எழுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப் பிடப்பட்டுள்ளது.

போலீஸ் வரவேற்பு இது குறித்து, கரியாபந்த் மாவட்ட எஸ்.பி., ராகேச்சா கூறியதாவது: இந்த கடிதத்தை நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம். இது ஒரு, 'பாசிட்டிவ்'வான முயற்சி. பல்வேறு பகுதிகளில் செயல்படும் நக்சல்கள், விரைவில் சரணடையும்படி கேட்டுக் கொள்கிறேன். அவர்கள், தயக்கமின்றி நேரடியாக என்னை அணுகலாம். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக சேர்வதை நாங்கள் உறுதி செய்வோம். மேலும், அவர்களின் மறுவாழ்வுக்காக உதவுவோம். இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us