ஜாதிவாரி கணக்கெடுப்பு கர்நாடகாவில் துவக்கம்
ஜாதிவாரி கணக்கெடுப்பு கர்நாடகாவில் துவக்கம்
ஜாதிவாரி கணக்கெடுப்பு கர்நாடகாவில் துவக்கம்
ADDED : செப் 23, 2025 07:54 AM

பெங்களூரு : பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் குழப்பங்களுக்கு இடையே, கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நேற்று துவங்கியது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சியினர், பல்வேறு சமூகத்தினரின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நேற்று துவங்கியது.
ஆசிரியர்கள் அந்தந்த பகுதிக்கு சென்று, ஆய்வை துவக்கினர். சில இடங்களில் ஆய்வுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய, 'கிட்'கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
ஷிவமொக்காவில், 'கிட்'ளை பெறுவதற்காக ஆசிரியர்கள் கல்வித்துறை அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால், கிட் கிடைக்காமல் குழப்பம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மதுபங்காரப்பா, குழப்பத்தை சரி செய்து, ஆசிரியர்களுக்கு கிட் வழங்கி, கணக்கெடுப்பை துவக்கி வைத்தார்.
பல்லாரி, ஹாவேரியில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டது. ஜாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை, பதிவு செய்ய அரசு அளித்துள்ள, 'மொபைல் போன்' செயலி இயங்கவில்லை. சித்ரதுர்கா, கதக்கில் தொழில்நுட்ப பிரச்னையால், ஆய்வு தாமதமானது.
ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிக்க, 15 நாட்கள் அவசகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், '15 நாட்கள் போதாது. மூன்று மாதம் வேண்டும்' என, ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
இதற்கிடையே, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. கணக்கெடுப்புக்கு தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம், விசாரணையை இன்று ஒத்திவைத்தது.