கொரோனா நோயாளியை கொல்லும்படி உத்தரவிட்ட அரசு டாக்டர் மீது வழக்கு
கொரோனா நோயாளியை கொல்லும்படி உத்தரவிட்ட அரசு டாக்டர் மீது வழக்கு
கொரோனா நோயாளியை கொல்லும்படி உத்தரவிட்ட அரசு டாக்டர் மீது வழக்கு
ADDED : மே 30, 2025 01:56 AM

லாத்துார்: கொரோனா நோயாளியை கொன்றுவிடும்படி ஜூனியருக்கு உத்தரவிட்ட அரசு டாக்டர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மஹாராஷ்டிராவின், லாத்துார் மாவட்டத்தை சேர்ந்த தயாமி அஜிமோதீன் கவுசோதீன், 53, என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சிகிச்சை
அதன் விபரம்:
கொரோனா தொற்று பரவல் கடந்த 2021ல் தீவிரமாக இருந்தபோது, என் மனைவி கவுசர் பாத்திமா, 41, பாதிக்கப்பட்டார்.
உத்கிர் அரசு மருத்துவ மனையில், 2021 ஏப்., 15ல் அனுமதித்தேன்; 10 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அப்போது, டாக்டர் சஷிகாந்த் தேஷ்பாண்டே என்பவர் அந்த அரசு மருத்துவமனையின் கூடுதல் மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார்.
மற்றொரு டாக்டரான சஷிகாந்த் டாங்கே, என் மனைவிக்கு சிகிச்சை அளித்தார்.
மருத்துவமனையில் இருந்த ஏழாவது நாள், டாக்டர் டாங்கே மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் முன் நான் அமர்ந்திருந்தேன்.
அப்போது டாக்டர் தேஷ்பாண்டே, மொபைல் போன் வாயிலாக டாக்டர் டாங்கேவை அழைத்தார். சாப்பிட்டுக் கொண்டு இருந்ததால், 'ஸ்பீக்கர் போன்' வாயிலாக டாங்கே பேசினார்.
அப்போது, 'எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளன' என, தேஷ்பாண்டே கேட்டார்.
'ஒரு படுக்கை கூட காலியாக இல்லை' என, டாங்கே தெரிவித்தார். அதற்கு, 'மருத்துவமனைக்குள் ஒருவரையும் அனுமதிக்காதே. அந்த தயாமியின் மனைவியை கொன்றுவிடு' என, தேஷ்பாண்டே தெரிவித்தார்.
அதன்பின், சில மோசமான வார்த்தைகளையும் தேஷ்பாண்டே தெரிவித்தார். மனைவி சிகிச்சை பெற்று வந்த தால் அப்போது அமைதியாக இருந்துவிட்டேன். சில நாட்களில் என் மனைவி குணமாகி வீடு திரும்பினார்.
நோட்டீஸ்
அந்த உரையாடலின் ஆடியோ பதிவு, கடந்த 2ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியானது. அதை கேட்டபோது என் மனம் புண்பட்டது. எனவே புகார் அளித்துள்ளேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தயாமியின் புகார் அடிப்படையில், டாக்டர் சஷிகாந்த் தேஷ்பாண்டே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதில் உள்ள ஆடியோ பதிவின் உண்மைத்தன்மையை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மறுமுனையில் பேசிய டாக்டர் சஷிகாந்த் டாங்கே, விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.