மகன் மர்ம மரணத்தில் 'மாஜி' டி.ஜி.பி., மீது வழக்கு
மகன் மர்ம மரணத்தில் 'மாஜி' டி.ஜி.பி., மீது வழக்கு
மகன் மர்ம மரணத்தில் 'மாஜி' டி.ஜி.பி., மீது வழக்கு
ADDED : அக் 22, 2025 06:12 AM

சண்டிகர்: பஞ்சாபில் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி., மகன் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தையை குற்றஞ்சாட்டி அவர் ஏற்கனவே பதிவு செய்திருந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து, குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பஞ்சாப் போலீஸ் டி.ஜி.பி.,யாக இருந்த முகமது முஸ்தபாவின் மகன் அகில் அக்தர், 35, சமீபத்தில் உயிரிழந்தார். பஞ்சகுலாவில் உள்ள பண்ணை வீட்டில், அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து குடும்பத்தினர் கூறுகையில், 'போதை மருந்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் அகில் உயிரிழந்தார்' என, குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சம்சுதின் சவுத்ரி என்பவர் அகில் மரணம் தொடர்பாக முழு விசாரணை நடத்தக் கோரி போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக, அகில் ஏற்கனவே பதிவு செய்து வெளியிட்ட 16 நிமிட வீடியோவையும் அவர் இணைத்திருந்தார்.
அந்த வீடியோவில் அகில் அக்தர் கூறியுள்ளதாவது:
என் தந்தை முஸ்தபாவுக்கு, என் மனைவியுடன் தகாத உறவு இருந்துள்ளது. இதற்கு என் தாயான காங்கிரசை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜியா சுல்தானா உள்ளிட்டோரும் உடந்தையாக இருந்து உள்ளனர்.
இதை எதிர்த்ததால், போதைப் பழக்கம் இல்லாத என்னை போதை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி, கொலை செய்ய முயன்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சவுத்ரியின் புகாரை தொடர்ந்து, முன்னாள் டி.ஜி.பி., முஸ்தபா, அவரது மனைவி ராஜியா சுல்தானா, அகிலின் மனைவி மற்றும் சகோதரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


