பட்ஜெட் அனைவருக்குமானது - பிரதமர் மோடி: பட்ஜெட் கூட்டாளிகளுக்கானது - ராகுல்
பட்ஜெட் அனைவருக்குமானது - பிரதமர் மோடி: பட்ஜெட் கூட்டாளிகளுக்கானது - ராகுல்
பட்ஜெட் அனைவருக்குமானது - பிரதமர் மோடி: பட்ஜெட் கூட்டாளிகளுக்கானது - ராகுல்
UPDATED : ஜூலை 23, 2024 02:55 PM
ADDED : ஜூலை 23, 2024 02:25 PM

புதுடில்லி: '' மத்திய பட்ஜெட் இளைஞர்கள், ஏழைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்குமானது'' என பிரதமர் மோடி கூறியுள்ளார். பட்ஜெட் நாற்காலியைக் காப்பாற்றுவதற்கானது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து குறித்து பிரதமர் மோடி கூறியதாவது: மத்திய பட்ஜெட் மகளிர் பழங்குடியினர் சிறுவணிகர் மேம்பாட்டிற்கு உதவும். இளைஞர்கள், ஏழைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்குமானது. அனைத்து சமூகத்தையும் வலுப்படுத்துவதுடன் அவர்களின் வளர்ச்சிக்கும், அதிகாரம் பெறுவதற்கும் வழிவகுக்கும்.
உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சமூகத்தின் அனைத்து படிநிலைகளையும் வலுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து அகற்றப்பட்டு உள்ளனர். முத்ரா திட்டத்தில் கடன் உயர்த்தப்பட்டதால் பெண்கள் பயன்பெறுவார்கள். வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தால் பல கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும். புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும். ஒவ்வொருவரையும் புதிய தொழில்முனைவோராக மாற்றும் அம்சங்கள் உள்ளன.இந்தியாவை உலகின் உற்பத்தி கேந்திரமாக மாற்றும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ராகுல் எதிர்ப்பு
இது குறித்து காங்., எம்.பி ராகுல் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பட்ஜெட், நாற்காலியைக் காப்பாற்றுவதற்கானது. கூட்டாளிகளை சமாதானப்படுத்துகிறது. சாமானிய இந்தியருக்கு எந்த நிவாரணமும் இல்லாமல் கூட்டாளிகளுக்கு நன்மை பயக்கும் பட்ஜெட். காங்கிரசின் முந்தைய பட்ஜெட் அப்படியே காப்பி பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.