10 ஆண்டுக்கு முன் மாயமான சிறுவன் ஹரியானாவில் மீட்பு
10 ஆண்டுக்கு முன் மாயமான சிறுவன் ஹரியானாவில் மீட்பு
10 ஆண்டுக்கு முன் மாயமான சிறுவன் ஹரியானாவில் மீட்பு
ADDED : ஜூன் 11, 2025 08:05 PM
நொய்டா:நொய்டாவில், 2015ம் ஆண்டு காணாமல் போன சிறுவன் ஹரியானாவில் கண்டுபிடிக்கப்பட்டான். மர-பணு பரிசோதனைக்குப் பின், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவான் என போலீசார் கூறினர்.
உத்தர பிரதேச மாநிலம், நொய்டா பேஸ் - 2, கெஜா கிராமத்தில், 2015ம் ஆண்டு ஏழு வயது சிறுவன் காணாமல் போனான். இதுகுறித்து, நொய்டா போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக தேடிவந்த போதிலும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இந்த வழக்கில், 2022ம் ஆண்டு டிசம்பரில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், ஹரியானா மாநிலம் சூரஜ்குண்ட் போலீசார், மே 28ம் தேதி கடத்தல் வழக்கு ஒன்றில், மங்கள் குமார் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் போது, 2015ல் ஏழு வயது சிறுவனை கடத்தியதையும் ஒப்புக் கொண்டார். சூரஜ்குண்ட் போலீசார் இதுகுறித்து நொய்டா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
மத்திய நொய்டா போலீஸ் துணைக் கமிஷனர் சக்தி மோகன் அவஸ்தி தலைமையில் போலீசார், சூரஜ்குண்ட் விரைந்தனர். மங்கள் குமாரிடம் விசாரணை நடத்தினர். நொய்டாவில் கடத்திய சிறுவனை பெயரை மாற்றி விற்று விட்டதாக வாக்குமூலம் அளித்தார். பெயர் மாற்றப்பட்டதால் சிறுவனை உடனடியாக கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின், சூரஜ்குண்டிலேயே சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான். குடும்பம் மற்றும் குழந்தைப் பருவம் குறித்து சிறுவனிடம் போலீசார் விசாரித்தனர். ஆறு மணி நேரம் சிறுவனிடம் வாக்குமூலம் பதிவு செய்து, 2015ல் பதிவு செய்த வழக்கை புதுப்பித்தனர்.
சிறுவனுக்கு பெற்றோர் பெயர்கள் நினைவில் இருந்தது. ஆனால், வீட்டு முகவரி நினைவில் இல்லை. சிறுவனுடைய தந்தையின் நண்பர் மொபைல் போன், முதல் தகவல் அறிக்கையில் இருந்தது. அதன் வாயிலாக, தற்போது ஆக்ராவில் வசிக்கும் சிறுவனின் பெற்றோர் கண்டுபிடிக்கப்பட்டனர்.
சிறுவனின் வலது கை விரலில் வெட்டுக்காய தழும்பு மற்றும் இடது கண்ணுக்கு கீழ் ஒரு மச்சம் ஆகியவற்றை வைத்து தங்கள் மகன் என்பதை உறுதி செய்தனர்.
இருப்பினும், சட்ட நடைமுறைகள் மற்றும் மரபணு பரிசோதனைக்குப் பிறகே, சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார் என போலீசார் கூறினர். ஏழு வயதில் காணாமல் போன சிறுவனுக்கு தற்போது, 17 வயது ஆகிறது.