திட்டியதால் கொலையான முதலாளி மனைவி - மகன்: வேலைக்காரர் வெறிச்செயல்
திட்டியதால் கொலையான முதலாளி மனைவி - மகன்: வேலைக்காரர் வெறிச்செயல்
திட்டியதால் கொலையான முதலாளி மனைவி - மகன்: வேலைக்காரர் வெறிச்செயல்
ADDED : ஜூலை 04, 2025 12:20 AM

புதுடில்லி: டில்லியில், பணியில் அலட்சியமாக இருந்ததற்காக திட்டியதால் முதலாளியின் மனைவி மற்றும் மகனை கொன்றுவிட்டு தப்பிய வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
டில்லியின் லஜ்பத் நகரில், குல்தீப் சேவானி என்பவர் தன் மனைவி ருச்சிகா மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மகனுடன் வசித்து வந்தார். அதே பகுதியில், அவர் துணிக்கடை நடத்தி வந்தார். அவரிடம் ஓட்டுநராக, பீஹாரின் ஹிஜாப்பூரைச் சேர்ந்த முகேஷ் என்பவர், நான்கு ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.
அவ்வப்போது, வீட்டு வேலைகளையும் அவர் செய்து வந்தார். சமீபத்தில், பணியில் அலட்சியமாக இருந்ததற்கு குல்தீபின் மனைவி ருச்சிகா, முகேஷை திட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குல்தீப் இல்லாத நேரம் பார்த்து நேற்று முன்தினம் இரவு அவரின் வீட்டுக்கு முகேஷ் சென்றார். தன்னை திட்டிய ருச்சிகா மற்றும் அவரின் 14 வயது மகனை கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொன்றார். பின், வீட்டின் கதவை பூட்டிவிட்டு அவர் தப்பிச் சென்றார்.
இரவு வீட்டிற்கு வந்த குல்தீப், வீடு பூட்டியிருந்ததை அடுத்து, தன் மனைவி, மகனுக்கு போன் செய்தார். நீண்டநேரம் அவர்கள் எடுக்காததால் சந்தேகமடைந்த அவர், போலீசின் உதவியை நாடினார். போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு, படுக்கையறையில் ருச்சிகாவும், குளியலறையில் அவரது மகனும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
வீட்டு படிக்கட்டு மற்றும் வாசலில் ரத்தக்கறை படிந்திருந்ததை அடுத்து, போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
வீட்டில் வேலை செய்த முகேஷ் மாயமானதை அடுத்து, அவர் மீது சந்தேகம் வலுத்தது. டில்லியை விட்டு முகேஷ் தப்பியதை அடுத்து, அண்டை மாநில போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதையடுத்து, உத்தர பிரதேச போலீசார் உதவியுடன் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், திட்டியதால் முதலாளியின் மனைவி மற்றும் மகனை கொன்றதை முகேஷ் ஒப்புக்கொண்டார்.