முதல்வர் அலுவலகம், கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு
முதல்வர் அலுவலகம், கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு
முதல்வர் அலுவலகம், கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு
ADDED : செப் 09, 2025 10:59 PM

புதுடில்லி:முதல்வர் அலுவலகம், மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக நேற்று வந்த மிரட்டலையடுத்து, தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால், வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை.
தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள முதல்வர் அலுவலகம், மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில், சக்தி வாய்ந்த ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருப்பதாக நேற்று காலை, 'இ-மெயில்'கள் வந்திருந்தன.
தீவிர சோதனை வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள், வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள், மோப்பநாய் படைப் பிரிவினர், தீயணைப்புப் படையினர், பேரிடர் மீட்புப் படையினர், மற்றும் போலீசார் மூன்று இடங்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.
ஆனால், வெடி பொருட்கள் எதுவும் இல்லை. புரளி என்பது தெரிய வந்தது. மூன்று இடங்களுக்கும் வந்த மிரட்டல் இ-மெயில் குறித்து சைபர் கிரைம் பிரிவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.'
தலைநகர் டில்லி மற்றும் நொய்டா ஆகிய இடங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சில மாதங்களுக்கு முன், தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.
அதுகுறித்தும் ஏற்கனவே சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வரும் நிலையில் நேற்று, முதல்வர் அலுவலகம் உட்பட மூன்று இடங்களுக்கு மிரட்டல் வந்துள்ளது.
கமாண்டோ படை ஆகஸ்ட் 20ம் தேதி காலை சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில், பொதுமக்களிடம் முதல்வர் ரேகா குப்தா குறைகளை கேட்டார்.
அப்போது, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தினார்.
இதையடுத்து, முதல்வர் ரேகா குப்தாவுக்கு சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டது.
அடுத்த சில நாட்களில் சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. அதேநேரத்தில், டில்லி மாநகரப் போலீசின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
தற்போது, முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட மூன்று இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதையடுத்து, முதல்வர் ரேகா குப்தாவுக்கு, ஆயுதம் ஏந்திய சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட்டு உள்ளது.
சி.ஆர்.பி.எப்., கமாண்டோக்கள் உள் பாதுகாப்பு வளையத்தையும், டில்லி போலீஸ் வெளிப்புற வளையத்தையும் அமைத்து முதல்வர் ரேகாவுக்கு பாதுகாப்பு அளிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.