யமுனையில் விரைவில் படகு சவாரி முதல்வர் ரேகா குப்தா தகவல்
யமுனையில் விரைவில் படகு சவாரி முதல்வர் ரேகா குப்தா தகவல்
யமுனையில் விரைவில் படகு சவாரி முதல்வர் ரேகா குப்தா தகவல்
ADDED : ஜூன் 21, 2025 07:09 PM

புதுடில்லி:“யமுனை நதி நம் நம்பிக்கைச் சின்னம். முந்தைய அரசுகள் யமுனை நதியை சுத்தம் செய்ய அக்கறை காட்டவில்லை. ஆனால், பா.ஜ., அரசு பொறுப்பேற்ற இந்த நான்கு மாதங்களில் யமுனையை சுத்தம் செய்ய கடுமையாக உழைத்து வருகிறோம்,”என, முதல்வர் ரேகா குப்தா பேசினார்.
தலைநகர் டில்லியில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. 11 இடங்களில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மற்ரும் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பாஜ., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சோனியா விஹார் யமுனை நதிக்கரையில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரேகா குப்தா, அமைச்சர் கபில் மிஸ்றா, லோக்சபா எம்.பி., மனோஜ் திவாரி மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை துவக்கி வைத்து முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
சர்வதேச யோகா தின கொண்டாட்டத்துக்கு யமுனை நதிக்கரையை தேர்ந்தெடுத்ததற்கு காரணம், யமுனை நதியை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது என்பதை மக்களுக்குக் காட்டுவதற்குதான்.
யமுனை நதி நம் நம்பிக்கையின் சின்னம். ஆனால், முந்தைய அரசுகள் யமுனையை புறக்கணித்து விட்டன. யமுனை நதியை சுத்தம் செய்ய அக்கறை காட்டவில்லை. பா.ஜ., ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த நான்கு மாதங்களில், யமுனையை சுத்தம் செய்ய கடுமையாக உழைத்து வருகிறோம். யமுனை நதியில் விரைவில் படகு சவாரி துவக்கப்படும்.
ஆம் ஆத்மி கட்சி, பிரதமர் நரேந்திர மோடியுடன் யோகாவை தொடர்புபடுத்தி பார்க்கிறது. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?
இவ்வாறு அவர் பேசினார்.
சத்ரசால் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட், தியாகராஜா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா பங்கேற்றனர்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையமைத்து பாடியுள்ள யோகா குறித்த பாடலை, முதல்வர் ரேகா குப்தா நேற்று முன் தினம் வெளியிட்டார்.
வாழும் கலை
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா பிரம்மசரோவரில் பாபா ராம்தேவ் தலைமையில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா, முதல்வர் நயாப் சிங் சைனி, சுகாதாரத் துறை அமைச்சர் குமாரி ஆர்த்தி சிங் ராவ், எம்.பி., நவீன் ஜிண்டால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய நயாப் சிங் சைனி, “யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல; ஆரோக்கியமாக வாழ்வதற்கான அறிவியல். யோகா ஒரு வாழும் கலை,”என்றார்.
பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில், பஞ்சாப் அமைச்சர் அமன் அரோரா, சண்டிகரில் மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, லூதியானாவில் பஞ்சாப் அமைச்சர் தருண் பிரீத் சிங் சோண்ட், பாசில்கா ஷாஹீத் பகத் சிங் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., நரிந்தர் பால் சிங் சவ்னா பங்கேற்றனர்.