'ஆப்பரேஷன் பெங்கால்' மே.வங்கத்தில் பா.ஜ., தேர்தல் வியூகம்; சட்டசபை தேர்தலுக்கு தயாராகிறது
'ஆப்பரேஷன் பெங்கால்' மே.வங்கத்தில் பா.ஜ., தேர்தல் வியூகம்; சட்டசபை தேர்தலுக்கு தயாராகிறது
'ஆப்பரேஷன் பெங்கால்' மே.வங்கத்தில் பா.ஜ., தேர்தல் வியூகம்; சட்டசபை தேர்தலுக்கு தயாராகிறது
ADDED : ஜூன் 01, 2025 01:02 AM

அடுத்தாண்டு ஏப்., - மே மாதங்களில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, மேற்கு வங்கத்துக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக, 'ஆப்பரேஷன் பெங்கால்' என்ற பெயரில், தேர்தல் வியூகம் வகுக்க பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது.
கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துஉள்ளது. அடுத்தாண்டு ஏப்., - மே மாதங்களில் இங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் உள்ள மம்தா பானர்ஜி, நான்காவது முறையும் வெற்றியை எதிர்பார்த்துள்ளார். கடந்த தேர்தல்களில் வலுவடைந்து வரும் பா.ஜ., இந்த முறை ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக உள்ளது.
விமர்சனம்
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் மேற்கு வங்கத்துக்கு பயணம் மேற்கொண்டார். முர்ஷிதாபாதில் நடந்த வன்முறை தொடர்பாக ஆளும் திரிணமுல் காங்.,கை கடுமையாக விமர்சித்தார்.
மேலும், ஊழல்கள் அதிகரித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டி பேசினார்.
இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக, பா.ஜ.,வின் தேர்தல் வியூகங்களை வகுக்கும் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று கொல்கட்டா வந்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், கட்சி கூட்டங்களிலும் பங்கேற்கிறார்; கட்சி நிர்வாகிகளையும் சந்திக்கிறார். இந்தப் பயணத்தின்போது, சட்டசபை தேர்தலுக்கான வியூகங்கள் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஆலோசனை
மேலும், ஏற்கனவே பணி நீட்டிப்பில் உள்ள மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தாருக்கு பதிலாக, புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளார். தற்போது சுகந்தா மஜும்தார், மத்திய இணைஅமைச்சராக உள்ளார்.
இந்தப் பயணத்தை, ஆளும் திரிணமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ''சுற்றுலா பயணி போல எப்போதாவது தான் இந்த தலைவர்கள் மேற்கு வங்கத்துக்கு வருகின்றனர்.
''பெண்கள் பிரச்னைகள் குறித்து அவர்கள் எழுப்புவதால், எந்த பலனையும் பெறப்போவதில்லை,'' என, திரிணமுல் காங்.,கைச் சேர்ந்த அமைச்சர் சாஷி பாஞ்சா கூறியுள்ளார்.
சுகந்தா மஜும்தார் கூறியதாவது:
அமித் ஷாவின் பயணத்தின்போது, சட்டசபை தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கப்படும். 'ஆப்பரேஷன் பெங்கால்' என்ற இந்த துல்லிய தாக்குதல், மேற்கு வங்க பெண்களின் கண்ணியத்தை காப்பாற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.