Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சட்டசபை கூட்டத்துக்கு பா.ஜ., தலைவர்கள் தயார்!: அரசின் கண்ணில் விரல் விட்டு ஆட்ட திட்டம்

சட்டசபை கூட்டத்துக்கு பா.ஜ., தலைவர்கள் தயார்!: அரசின் கண்ணில் விரல் விட்டு ஆட்ட திட்டம்

சட்டசபை கூட்டத்துக்கு பா.ஜ., தலைவர்கள் தயார்!: அரசின் கண்ணில் விரல் விட்டு ஆட்ட திட்டம்

சட்டசபை கூட்டத்துக்கு பா.ஜ., தலைவர்கள் தயார்!: அரசின் கண்ணில் விரல் விட்டு ஆட்ட திட்டம்

ADDED : ஜூன் 28, 2024 11:06 PM


Google News
பெங்களூரு: கர்நாடக சட்டசபை கூட்டத்துக்கு எதிர்க்கட்சியான பா.ஜ., தயாராகிறது. அரசுக்கு குடைச்சல் கொடுக்க ஏராளமான அஸ்திரங்கள் கை வசம் இருப்பதால், அக்கட்சியினர் குஷியடைந்துள்ளனர். இவற்றை திறமையாக பிரயோகித்து, அரசை நெருக்கடியில் சிக்கவைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு உள்ளது. லோக்சபா தேர்தல் முடிந்த கையோடு, சட்டசபை கூட்டத்துக்கு தயாராகி வருகிறது. ஜூலை முதல் வாரம் சட்டசபை கூட்டம் துவங்கப்படலாம்.

தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சட்டசபை கூட்டத்தில் அரசுக்கு எப்படி குடைச்சல் கொடுக்கலாம் என்பது குறித்து, எதிர்க்கட்சி ஆலோசிக்கிறது.

குறைந்த வெற்றி


சட்டசபை தேர்தலில், 135 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியால், லோக்சபா தேர்தலில் எதிர்பார்த்த தொகுதிகளை கைப்பற்ற இயலவில்லை. எதிர்க்கட்சியான பா.ஜ., 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

சித்தராமையாவின் வாக்குறுதித் திட்டங்கள் மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை, தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன. இச்சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி, சட்டசபை கூட்டத்தில் அரசை தாளிக்க, பா.ஜ., குஷியோடு தயாராகி வருகிறது.

லோக்சபா தேர்தல் முடிவு வெளியான பின், நடக்கும் முதல் கூட்டம் இது. இதில் அரசை நெருக்கடியில் சிக்க வைப்பதற்கான, பல அஸ்திரங்கள் பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ளன.

வால்மீகி மேம்பாட்டு ஆணையம் நிதி முறைகேடு, பெட்ரோல், டீசல், பால் விலை உயர்வு, பொருளாதார சீர்குலைவு, கட்சியில் நடந்து வரும் முதல்வர் மாற்றம், கூடுதல் துணை முதல்வர் பதவிகள் உருவாக்குவது, முதல்வர், துணை முதல்வர் இடையே நடக்கும் பனிப்போர், அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய பேச்சு என, அரசுக்கு எதிரான பல்வேறு அஸ்திரங்கள் கிடைத்துள்ளன.

இவற்றை பிரயோகித்து, காங்கிரஸ் அரசின் கண்களில் விரலை விட்டு ஆட்ட, பா.ஜ., தலைவர்கள் இப்போதே 'ஹோம் ஒர்க்' செய்கின்றனர்.

திட்டம் தீட்டுதல்


எதிர்க்கட்சித் தலைவர், மூத்த எம்.எல்.ஏ.,க்கள், சுறுசுறுப்பான எம்.எல்.ஏ.,க்கள் அடங்கிய குழுவை அமைத்துக் கொண்டு, சட்டசபையில் எந்த வகையில் செயல்படுவது என, திட்டம் வகுக்கின்றனர்.

காங்கிரஸ் அரசு ஓராண்டு செயல்பட்ட விதம், என்னென்ன குளறுபடிகளை செய்துள்ளது என்பதை, ஆதாரங்களுடன் விவரிக்க தயாராகின்றனர். மக்களுக்காக குரல் கொடுக்கும் திறமையான எதிர்க்கட்சி என்பதை, மக்களுக்கு உணர்த்த திட்டம் வகுக்கின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடரில் செயல்பட்டதை போன்று, கூட்டணி கட்சியான ம.ஜ.த.,வுடன் ஒருங்கிணைந்து செயல்பட, பா.ஜ., விரும்புகிறது.

எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள, அரசும் கூட தயாராகி வருகிறது. இதற்கு முன்பு சட்டசபையில், எடியூரப்பா, குமாரசாமி, பசவராஜ் பொம்மை, ஈஸ்வரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், ரவி உட்பட பல எம்.எல்.ஏ.,க்கள் அரசை நடுங்க வைத்தனர்.

ஆனால் எடியூரப்பா தேர்தலில் போட்டியிடாமல், மகனை எம்.எல்.ஏ.,வாக்கினார். ஈஸ்வரப்பா தற்போது எந்த பதவியிலும் இல்லை. ரவி, ஜெகதீஷ் ஷெட்டர் சட்டசபை தேர்தலில் தோற்றனர்.

தற்போது ரவி எம்.எல்.சி.,யாக மேலவைக்கு சென்றுள்ளார். குமாரசாமி, ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை, எம்.பி.,க்களாக தேசிய அரசியலுக்கு சென்றுள்ளனர். பேச்சுத்திறன் கொண்ட எம்.எல்.ஏ.,க்கள் இல்லை.

பா.ஜ., மாநிலத் தலைவர் விஜயேந்திரா, முதன் முறையாக சட்டசபைக்குச் சென்றுள்ளார். விஜயேந்திரா, எதிர்க்கட்சித் தலைவர் அசோக், அரசை எப்படி எதிர்கொள்வர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்


பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:

பரஸ்பரம் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்புடன் செயல்படும் நோக்கில், இம்முறை சட்டசபை கூட்டத்துக்கு முன்பே, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

பசவராஜ் பொம்மை, கோட்டா சீனிவாச பூஜாரி போன்ற பேச்சுத்திறன் கொண்ட தலைவர்கள் இல்லை என்ற எண்ணம் தோன்றாமல், செயல்படுவது கட்சியின் மற்ற எம்.எல்.ஏ.,க்களின் பொறுப்பாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us