Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கேரளாவில் பா.ஜ., நிர்வாகி சுட்டுக்கொலை; ஒருவர் கைது

கேரளாவில் பா.ஜ., நிர்வாகி சுட்டுக்கொலை; ஒருவர் கைது

கேரளாவில் பா.ஜ., நிர்வாகி சுட்டுக்கொலை; ஒருவர் கைது

கேரளாவில் பா.ஜ., நிர்வாகி சுட்டுக்கொலை; ஒருவர் கைது

UPDATED : மார் 21, 2025 11:50 AMADDED : மார் 21, 2025 11:49 AM


Google News
Latest Tamil News
கண்ணூர்: கேரளாவில் பா.ஜ., நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த சில மணி நேரங்களில், துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

கேரளாவின் மதமங்கலம் புனியன்கோடு பகுதியைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகி ராதாகிருஷ்ணன், 51. இவர் சரக்கு வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், சந்தோஷ் என்பவருக்கும் வீடு கட்டுமான ஒப்பந்தம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது.

கேரளாவில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் குழுவில் சந்தோஷ் இடம்பெற்றுள்ளார். இந்த சூழலில், இருவருக்கும் மீண்டும் பிரச்னை ஏற்பட்ட நிலையில், சந்தோஷ் தனது பேஸ்புக்கில் நேற்று மாலை 4.23 மணிக்கு, 'இலக்கை வீழ்த்த வேண்டிய வேலை வந்து விட்டது,' என்று கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், 7 மணியளவில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்க்கும் போது, காட்டுப்பன்றிகளை வேட்டையாடும் துப்பாக்கியால், ராதாகிருஷ்ணனை சந்தோஷ் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். இதனால், ராதாகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே, இரவு 7.27 மணிக்கு சந்தோஷ் விடுத்த மற்றொரு பதிவில், 'என் மகளை தொந்தரவு செய்யாதே என்று நான் உன்னிடம் சொல்லவில்லையா? என் உயிர் போனாலும் கூட தாங்கிக் கொள்வேன். ஆனால், என்னுடைய மகள்... உன்னை மன்னிக்கவே மாட்டேன்,' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, தலைமறைவாக இருந்த சந்தோஷை போலீசார் கைது செய்தனர். அவர் மதுபோதையில் இருந்ததாகவும், தவறை ஒப்புக்கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கேரளாவில் பா.ஜ., நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us