ஆம் ஆத்மி மீது பொய் வழக்கு போடும் பா.ஜ., * விசாரணைக்கு ஆஜரான முன்னாள் துணை முதல்வர் ஆவேசம்
ஆம் ஆத்மி மீது பொய் வழக்கு போடும் பா.ஜ., * விசாரணைக்கு ஆஜரான முன்னாள் துணை முதல்வர் ஆவேசம்
ஆம் ஆத்மி மீது பொய் வழக்கு போடும் பா.ஜ., * விசாரணைக்கு ஆஜரான முன்னாள் துணை முதல்வர் ஆவேசம்
ADDED : ஜூன் 20, 2025 08:39 PM
புதுடில்லி:டில்லி மாநில லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் முன், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று ஆஜரானார். பின், பத்திரிகையாளர்களை சந்தித்த அக்கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஆதிஷி, ''ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் மீது வேண்டுமென்றே பொய் வழக்குகளை பா.ஜ., தொடர்கிறது,'' என்றார்.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் பள்ளி கட்டடங்கள் கட்டியதில், 2,000 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக, அக்கட்சியை சேர்ந்த, டில்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, கல்வி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உள்ளிட்ட பலர் மீதான வழக்குகளை மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்க துறை, சி.பி.ஐ., போன்றவை விசாரித்து வருகின்றன.
இந்நிலையில், மாநில லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழங்கிய நோட்டீசுக்கு இணங்கி, கடந்த 6ம் தேதி, சத்யேந்தர் ஜெயின் ஆஜரானார். நேற்று, முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆஜரானார்.
அதற்கு முன், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மணிஷ் சிசோடியா,''எங்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு, அரசியல் காரணங்களுக்கானது. அதில் உண்மை இல்லை. பல முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக இதுபோன்ற பொய் வழக்குகளை, பா.ஜ., தொடர்ந்துள்ளது,'' என்றார்.
பின், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, முன்னாள் முதல்வர் ஆதிஷி, நிருபர்களிடம் கூறியதாவது:
எங்களின் அரசு மீது ஏதாவது புகார் கூற வேண்டும் என்பதற்காக, பா.ஜ., தொடர்ந்த வழக்கு தான் இது. எங்களின் மூத்த தலைவர்கள் மீது, 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதைத் தவிர ஒரு சிறு துரும்பை கூட, ஆதாரமாக இந்த அரசு காட்டவில்லை.
பத்தாண்டுகளுக்கும் மேலாக எங்கள் தலைவர்கள், கோர்ட்டுக்கும், போலீசுக்கும் நடையாய் நடந்து வருகின்றனர். பா.ஜ.,வின் துண்டுதலின் படி செயல்படும் அமலாக்க துறையினர், சி.பி.ஐ., மற்றும் வருமான வரித்துறையினர் எந்த ஆதாரங்களையும் காட்டவில்லை.
எங்கள் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்த போது, கோர்ட் கூறியது போல, கூண்டுக்கிளி போலத் தான், இந்த மத்திய விசாரணை அமைப்புகள் செயல்படுகின்றன.
நாட்டின் தலைநகர் டில்லியில் பல பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக, மின் தடை இஷ்டத்திற்கு செய்யப்படுகிறது; மழை பெய்தால் போதும், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி விடுகிறது. தாழ்வான வீடுகளிலும் தண்ணீர் தேங்கி விடுகிறது. இந்த பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல், எங்கள் மீது பொய் வழக்குகள் போடுவதிலேயே இந்த அரசு குறியாக இருக்கிறது.
தனியார் கல்வித்துறை மாபியாக்களுடன் கூட்டு சேர்ந்து, பல அரசு பள்ளிகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. எங்களின் சுகாதார திட்டமான, மொஹல்லா கிளினிக் திட்டத்தை, 'சுகாதார கோவில்கள்' என பெயர் மாற்றி, மக்களை ஏமாற்றி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.