Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சோதனையை சாதனையாக மாற்றிய பாரதி கண்ட புதுமைப்பெண்

சோதனையை சாதனையாக மாற்றிய பாரதி கண்ட புதுமைப்பெண்

சோதனையை சாதனையாக மாற்றிய பாரதி கண்ட புதுமைப்பெண்

சோதனையை சாதனையாக மாற்றிய பாரதி கண்ட புதுமைப்பெண்

ADDED : ஜூலை 21, 2024 07:10 AM


Google News
Latest Tamil News
தடைகளைத் தகர்த்தெறிந்து, பெண்கள் சாதனை செய்ய வேண்டும் என, மகாகவி பாரதி கனவு கண்டார். அவர் கண்ட கனவை இன்று பல பெண்கள் நனவாக்கி வருகின்றனர். அவர்களில் கலபுரகியின் மஹாதேவியும் ஒருவர். சோதனைகளை கடந்து, சாதனை படைத்துள்ளார்.

அதிகம் படித்தவர்களால் மட்டுமே, சாதனைகள் செய்ய முடியும் என்று நினைத்த காலம் ஒன்றிருந்தது. பெண்கள் அடுப்பங்கரையில் ஒடுக்கப்பட்டனர். இப்போது காலம், தலைகீழாக மாறிவிட்டது.

போலீஸ், மருத்துவம், விண்வெளி, இலக்கியம், விளையாட்டு என, அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை செய்கின்றனர். பாரதி கண்ட புதுமைப்பெண்களாக வலம் வருகின்றனர்.

*வழிகாட்டி

ஒரு காலத்தில் தற்கொலைக்கு முயற்சித்த ஒரு பெண், இன்று 180 பெண்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார். இவரது சாதனை, உண்மையில் மனம் நொந்த பெண்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.

கலபுரகியின் மாணிக்கேஸ்வரி நகரில் வசிப்பவர் மஹாதேவி, 58. இவருக்கு திருமணமாகி, இரண்டு மகன்கள் உள்ளனர். 33 ஆண்டுகளுக்கு முன்பு, இவரது கணவர் திடீரென காலமானார். இதனால் நிலைக்குலைந்த இவர், தன் மகன்களுக்காக வாழ முடிவு செய்தார். இவர் வீடு வீடாக சென்று சப்பாத்தி தயாரித்து கொடுத்து, குடும்ப வாழ்க்கையை நகர்த்தத் துவங்கினார்.

ஒரு நாள் இவரது மகன், தனக்கு சப்பாத்தி வேண்டும் என, பிடிவாதம் பிடித்து அழுதார். சமாதானம் செய்தும் பயனில்லை. தான் சப்பாத்தி தயாரித்த வீடு ஒன்றில், மகனுக்காக ஒரு சப்பாத்தியை, யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்தார்.

இதையறிந்த வீட்டு உரிமையாளர் வாய்க்கு வந்தபடி திட்டினார். தன் மகனுக்காக கொண்டு சென்றதாக கூறியும், வீட்டு உரிமையாளர் இரக்கம் காண்பிக்கவில்லை; மஹாதேவியை திட்டினார்.

*மடாதிபதி ஊக்கம்

தனக்கு ஏற்பட்ட அவமதிப்பால், மனம் குன்றிய இவர், கலபுரகியின், ஜெடகா மடத்தில் பிள்ளைகளை விட்டு விட்டு, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதன்படி மகன்களுடன் மடத்துக்கு வந்தார். இங்கிருந்த சுவாமிகள், மஹாதேவியின் மனநிலையை புரிந்து கொண்டார்.

'தற்கொலை எண்ணத்தை கைவிட்டு, மகன்களுக்காக வாழுங்கள். வாழ்க்கையில் சோதனைகள் வரும். இவற்றை கடந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். உங்களுக்கு தெரிந்த கைவேலையை வைத்து, வாழ்க்கையை நடத்துங்கள்' என, அறிவுரை கூறினார்.

மடாதிபதியின் ஊக்கமான பேச்சால், மனம் மாறிய மஹாதேவி, மற்றவரின் வீட்டுக்குச் சென்று பிறர் வீட்டு வேலை செய்யாமல், தானே சப்பாத்தி தயாரித்து விற்க துவங்கினார். தினமும் 600 சப்பாத்திகள் வரை விற்பனை செய்தார்.

ஒன்பது ஆண்டுகள் வரை, தான் மட்டுமே இந்த பணியை செய்தார். தொழில் நிதானமாக சூடுபிடித்தது. தொழிலை விஸ்தரித்தார். தன்னை போன்று கஷ்டப்படும் பெண்களுக்கு வேலை கொடுத்தார்.

*5,000 சப்பாத்தி

இப்போது இவர் கலபுரகி நகருக்குள் ஆறு கிளைகளை திறந்துள்ளார். இவற்றில் 180 பெண்கள் வேலை செய்கின்றனர். தினமும் 5,000 சப்பாத்திகள் தயாரிக்கின்றனர். இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில், அனைத்துக்கும் இயந்திரங்கள் மார்க்கெட்டுக்கு வந்துள்ளன. சப்பாத்தி தயார் இயந்திரம் உள்ளது.

ஆனால் பெண்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில், அவர்களை சப்பாத்தி தட்ட வைக்கிறார். அதுமட்டுமல்ல. இயந்திரத்தை விட, கையால் தட்டி தயாரிக்கும் சப்பாத்தியின் சுவை அதிகம். இவரிடம் சில பெண்கள், 20 ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர். தினமும் 500 ரூபாய் கூலி பெறுகின்றனர்.

இவரது தொழில் கூடத்தில் சோளம், கோதுமை, கம்பு ஆகியவற்றால் சப்பாத்தி தயாரிக்கிறார். அரிசியில் ரொட்டியும் தயாரிக்கிறார். பல விதமான சட்னி கிடைக்கின்றன. பண்டிகை நாட்களில் பருப்பு போளியும் தயாரிக்கிறார்.

இவர் தயாரிக்கும் சப்பாத்திய சுகாதாரமாக, சுவையாக, ஊட்டச்சத்தானது என்பதால், பலரும் இவரது தொழிற் கூடத்துக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர்.

மஹாதேவியின் மகன் மல்லிகார்ஜுன், தினமும் ஏ.பி.எம்.சி.,க்கு கொண்டு சென்று, விவசாயிகள், கூலி தொழிலாளர்களுக்கு விற்கிறார். 35 ரூபாய்க்கு இரண்டு விதமான சட்னி, இரண்டு சப்பாத்தி, சாதம், சாம்பார் விற்கின்றனர். இரண்டு மணி நேரத்தில், 300 பேருக்கான உணவு விற்கப்படுகிறது.

சமையலுக்கு காஸ் அடுப்பு வந்தும், மஹாதேவி விறகு அடுப்பு பயன்படுத்தி உணவு தயாரிக்கிறார். இவரது தொழிற்கூடத்துக்கு 'ஸ்ரீ வீரபத்ரேஸ்வரா புட் சப்ளைஸ்' என, பெயர் வைத்துள்ளார். கலபுரகி நகரின் பல ஹோட்டல்களுக்கு, இவரது தொழிற்கூடத்தில் இருந்து, சப்பாத்திகள் சப்ளை ஆகின்றன. ஒரு சப்பாத்தி ஆறு ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்.

*மாவு அரைக்கும் மில்

இவர் சொந்தமாக மாவு அரைக்கும் மில்லும் வைத்துள்ளார். ஒரு காலத்தில் தற்கொலைக்கு தயாரான இவர், இன்று பல பெண்களுக்கு வேலை கொடுத்து, அவர்களின் வாழ்வில் ஒளியை ஏற்றியுள்ளார். இவரிடம் இளம்பெண்கள் மட்டுமின்றி, மூதாட்டிகளும் வேலை செய்கின்றனர்.

மன உறுதியும், விடா முயற்சியும் இருந்தால், சோதனைகளை கடந்து, சாதனை செய்ய முடியும் என்பதை, இவர் நிரூபித்து காண்பித்துள்ளார்.

மஹாதேவி கூறுகையில், ''எனக்கு படிப்பறிவு இல்லை. என்ன வேலை செய்வது என, தெரியவில்லை. வீடு வீடாக சென்று சப்பாத்தி தயாரித்து கொடுத்தேன். அதன்பின் நானே சொந்தமாக தயாரித்து விற்பனை செய்ய துவங்கினேன். தொழில் நன்றாக நடக்கிறது,'' என்றார்.

மஹாதேவியை பாராட்ட விரும்புவோர், 98457 02997, 97317 77092, 97310 46660 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு வாழ்த்தலாம்.- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us