பெங்களூருவை சேர்ந்த பெண் கோவாவில் சடலமாக கண்டெடுப்பு: காதலன் கைது
பெங்களூருவை சேர்ந்த பெண் கோவாவில் சடலமாக கண்டெடுப்பு: காதலன் கைது
பெங்களூருவை சேர்ந்த பெண் கோவாவில் சடலமாக கண்டெடுப்பு: காதலன் கைது
ADDED : ஜூன் 18, 2025 03:40 PM

பனாஜி: பெங்களூருவை சேர்ந்த பெண், கோவாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கொலை செய்ததாக காதலனை போலீசார் கைது செய்தனர்.
தெற்கு கோவாவின் பிரதாப் நகர் வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் உடல் நேற்று முன்தினம் காலை கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
உடல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றம் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கினர். பாதிக்கப்பட்டவருக்கு அருகில் இருந்த ஒரு பணப்பையில் இருந்து மீட்கப்பட்ட பஸ் டிக்கெட், முதல்கட்ட துப்பு தொடங்க உதவியது.
இந்த சம்பவம் குறித்து தெற்கு கோவா காவல் கண்காணிப்பாளர் டிகாம் சிங் வர்மா கூறியதாவது:
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கர்நாடகாவின் வடக்கு பெங்களூருவைச் சேர்ந்த சஞ்சய் கெவின் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொலையான பெண் ரோஷ்னி மோசஸ் 22 , அதே பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் 5 ஆண்டுகளாக உறவில் இருந்தனர்.பெங்களூருவிலிருந்து இருவரும் ஞாயிற்றுக்கிழமைன்று திருமணம் செய்து கொள்ள பஸ்சில் கோவாவுக்கு வந்திருந்தனர். பயணத்தின் போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் தெற்கு கோவாவில் உள்ள பிலியம்-தர்பந்தோராவில் பஸ்சில் இருந்து இறங்கி உள்ளனர்.
அதனை தொடர்ந்து, சஞ்சய், ரோஷ்னியை, பிரதாப் நகர் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு கத்தியால் ரோஷ்னியின் கழுத்தை அறுத்து கொலைசெய்துவிட்டு அங்கிருந்து சஞ்சய் தப்பிச்சென்றார்.
ரோஷ்னியின் அடையாளம் உறுதி செய்யப்பட்டவுடன், போலீசார் சஞ்சய் மீது தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இறுதியில் ஹுப்பள்ளியில் அவர் இருக்கும் இடம் தெரிந்தது அதனை தொடர்ந்து ,திங்கள்கிழமை இரவு சஞ்சய் அங்கு கைது செய்யப்பட்டார், உடல் கண்டுபிடிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்,காதல் உறவு தகராறுதான் இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.மேலும் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு டிகாம் சிங் வர்மா கூறினார்.