ஜாமின் விதி; மறுப்பது விதிவிலக்கு: மும்பை ஐகோர்ட்
ஜாமின் விதி; மறுப்பது விதிவிலக்கு: மும்பை ஐகோர்ட்
ஜாமின் விதி; மறுப்பது விதிவிலக்கு: மும்பை ஐகோர்ட்
ADDED : மே 12, 2025 12:48 AM

மும்பை: ஜாமின் தொடர்பான வழக்கில், 'ஜாமின் என்பது விதி; ஜாமின் மறுப்பது விதிவிலக்கு. விசாரணையின்றி நீண்ட நாட்களுக்கு கைதியை சிறையில் அடைத்து வைப்பது விசாரணைக்கு முந்தைய தண்டனைக்கு சமம்' என, மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018ல், உடன் பிறந்த சகோதரரை கொன்ற வழக்கில், விகாஸ் பாட்டீல் என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமின் கேட்டு விகாஸ் தாக்கல் செய்த மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி மிலிந்த் ஜாதவ் அமர்வு அவருக்கு ஜாமின் அளித்தது. அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இப்போதெல்லாம் வழக்கு விசாரணை முடிய நீண்ட காலம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மறுபுறம் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன. இதில் சமநிலையை நீதிமன்றங்கள் ஏற்படுத்த வேண்டும்.
விசாரணை முடியவில்லை என்ற காரணத்திற்காக, கைதியை நீண்ட நாள் சிறையில் வைத்திருப்பது விரைவான நீதி மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான அவர்களது அரசியலமைப்பு உரிமையை பாதிக்கிறது.
ஜாமின் என்பது விதி; ஜாமின் மறுப்பது விதிவிலக்கு. விசாரணையின்றி நீண்ட நாட்களுக்கு ஒருவரை சிறையில் அடைத்து வைப்பது விசாரணைக்கு முன்பே தண்டனை வழங்கியதற்கு சமம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.